போலீசார் பெர்சேயில் திடீர் சோதனை நடத்தி எதை நிருபிக்க முயல்கின்றனர்?, கெராக்கான் கேள்வி

 

BersihMelakaபேரணி நடப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பு பெர்சே அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தி போலீசார் எதை நிரூபிக்க முயல்கின்றனர் என்று கெராக்கான் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் எண்டி யோங் கேள்வி எழுப்புகிறார்.

ஜனநாயக முறைக்கு முரணாக அரசாங்கத்தை கவிழ்க்கும் நடவடிக்களை தாம் ஆதரிக்கவில்லை என்று கூறிய அவர், நாம் சட்டதிட்டங்களுக்கு உட்படாத நாட்டில் வாழ்பவர்கள் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதிகாரிகள் தங்களுடைய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு சட்டத்தை வியாக்கியானம் செய்யக்கூடாது என்று கூறினார்.

எந்த வகையில் பெர்சே தண்டனை சட்டத் தொகுப்பு செக்சன் 124C இன் கீழ் நாடாளுமன்ற ஜனநாயத்தை கீழறுப்பு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது?

இந்த திடீர் சோதனை நாளை நடைபெறவிருக்கும் பேரணி பற்றியது என்றால், ஏன் சிவப்புச் சட்டையினரின் அலுவலகமும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்று யோங் வினவினார்.

அல்லது, சோரோஸிடமிருந்து நிதி உதவி பெற்றதால் பெர்சேயும் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு தீங்கிழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிகள் மேற்கொண்டதை நிருபிக்க ஆதாரங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று அவர் கேட்டார்.

செக்சன் 124C இன் கீழ் ஒரு செயல் குற்றமாவதற்கு நாடாளுமன்ற ஜனநாயகத்தை வீழ்த்துவதற்கான, நாடாளுமன்ற ஜனநாயகத்தை கீழறுப்பு செய்வதற்கான, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது நிருபிக்கப்பட வேண்டும் என்பதை யோங் வலியுறுத்தினார்.

Andy Yongஅமைதியான ஒருங்கு கூடுதல் சட்டம் 2012 அவர்களின் (பெர்சேயின்) நாளைய அமைதியான ஒருங்கு கூடுதலை அனுமதிக்கிறது. அது குடிமக்களுக்கு அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமையும்கூட என்று எண்டி யோங் மேலும் தெரிவித்தார்.

இந்த திடீர் சோதனைக்கு உத்தரவிட்டது போலீஸ் படை தலைவர் (ஐஜிபி) என்றால், அவர் சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது. மலேசியா ஒரு போலீஸ் அரசு அல்ல என்றாரவர்.

இவ்வாறு செய்வதன் மூலம், அரசாங்கத்தை அதிகமாக மக்கள், குறிப்பாக நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள், வெறுப்பதற்கு வகை செய்யும் என்று யோங் திடமாகக் கூறியுள்ளார்.,