பங்சாரில் கூடிய பெர்சேயின் மஞ்சள் சட்டையினர் டட்டாரான் மெர்டேகா நொக்கி ஊர்வலமாக சென்றபோது ஜாலான் ட்ரேவர்சில் போலீஸ் தடுப்பு அரண் அவர்களைத் தடுத்து நிறுத்தியது.
முன்னாள் பெர்சே தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், ஆர்ப்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து அணிவகுத்துச் செல்ல அனுமதிக்குமாறு போலீஸ் அதிகாரிகளுடன் பேசிப்பார்த்தார்.
ஆனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த வழியில் தொடர்ந்து செல்வதை அனுமதிக்க போலீஸ் தயாராக இல்லை.
“இந்த இடம்வரை அவர்கள் வரலாம், ஒன்றுகூடலாம். போலீஸ் தடுப்பு அரணைத் தாண்டிச் செல்ல அனுமதிக்க முடியாது”, என ஒரு போலீஸ் அதிகாரி கண்டிப்பாகக் கூறிவிட்டார்.
போலீஸ் அனுமதி இல்லாததால் பங்சார் பெர்சே அணி அந்த இடத்திலேயே நிற்க வேண்டியதாயிற்று என அம்பிகா செய்தியாளர்களிடம் கூறினார்.
“தொடர்ந்து செல்ல விட மாட்டார்கள். மீறிச் சென்றால் கண்ணீர் புகை குண்டுகளை வெடிப்பார்கள். அதனால் இங்கேயே நிற்கப்போகிறோம். மற்ற தலைவர்கள் இரயில் ஏறி மற்ற இடங்களுக்குச் செல்லலாம்”, என்றாரவர்.
தடுத்து நிறுத்தப்பட்டாலும் பெர்சேக்கு இது ஒரு “வெற்றியே” என அம்பிகா கூறினார்.
“நான் எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகம். மருட்டல்கள்களையும் கைது நடவடிக்கைகளையும் கண்டு பயந்து விடுவோம் என்று நினைத்தார்கள்”.
படங்களில் எண்ணிக்கை குறைவாக தெரியலாம் ஆனால் சுமார் 100,000 பேர் அங்கு கூடியிருப்பதாக அம்பிகா மதிப்பிட்டார்.
“இங்கு 100,000. மற்ற இடங்களில் எவ்வளவு என்று உறுதியாக தெரியவில்லை”, என்றார்.