ஒருதலைச்சார்பான மதமாற்றத்தைத் தடுக்கும் சட்டவரைவு

conversionகணவன்/மனைவியரில்   ஒருவர்   இஸ்லாத்துக்கு   மதமாறிய  பின்னர்   எழும்  மணவிலக்கு,  பிள்ளை  பராமரிப்பு  விவகாரங்கள்    தொடர்பான   பிரச்னைகளுக்குத்   தீர்வு  காண்பதற்கு    விரிவான   சட்ட  திருத்தங்களைப்  பரிந்துரைக்கும்   சட்டமுன்வரைவு   இன்று   நாடாளுமன்றத்தில்   தாக்கல்    செய்யப்பட்டது.

இச்சட்டத்  திருத்தங்கள்  இஸ்லாத்துக்கு  மதமாறிய   ஒரு  வாழ்க்கைத்   துணை    மணவிலக்கு  பெற   சிவில்   நீதிமன்றத்தில்   மனுச்  செய்ய    வழிகோலும்.

இப்போதுள்ள   சட்டப்படி   இஸ்லாத்துக்கு  மதமாறிய   ஒருவர்   சிவில்   சட்டங்களின்கீழ்   மணவிலக்குக்  கோர   இயலாது.  சிலர்   மணவிலக்கு  பெற  ஷியாரியா  நீதிமன்றம்   செல்கிறார்கள்.

இருவரும்  வெவ்வேறு   நீதிமன்றங்களுக்குச்  செல்லும்போது   அங்கே  ஒரு  முரண்பாடு   எழுகின்றது.  சிவில்  நீதிமன்றம்,  ஷியாரியா  நீதிமன்றம்  இரண்டுமே  வெவ்வேறு   ஆணைகளைப்  பிறப்பிக்கக்  கூடும்.

புதிய   சட்டத்   திருத்தங்களின்படி,   வாழ்க்கைத்துணையில்   ஒருவர்    இஸ்லாத்துக்கு  மதம்  மாறிய   பின்னர்  சிவில்  திருமணங்களின்     மூலமாக     பிறந்த   பிள்ளைகளைப்  பொறுத்தவரை,   அவர்கள்    எம்மதத்தைச்   சேர்ந்தவர்களோ   அந்த  மதத்திலேயே   தொடர்ந்து   இருப்பார்கள்.  ஆனால்  ஒரு  விதிவிலக்கு.

இருதரப்பும்  குழந்தை  இஸ்லாத்துக்கு   மதம்   மாறுவதை  ஒப்புக்கொண்டால்   அது  வேறு  விசயம்.  பிள்ளைகள்  18 வயதை   எட்டும்போது  அவர்கள்  விருப்பப்படி   நடந்து கொள்ளலாம்.

புதிய     சட்டத்    திருத்தங்கள்   இப்படிப்  பல   விவகாரங்களுக்குத்  தீர்வை   முன்வைக்கின்றன.