ஒருதலைப்பட்சமான மத மாற்றம்: சட்ட திருத்தங்கள் மார்ச்/ஏப்ரல் 2017 இல்தான் விவாதிக்கப்படுமா?

 

parliamentmalaysiaஒருதலைப்பட்சமான மத மாற்றத்தால் இந்திரா காந்தி பெருந்துன்பத்திற்கு ஆளானார். அவரது மூன்று குழந்தைகளும் அவரது ஒப்புதல் இல்லாமலே இஸ்லாத்திற்கு மதம் மாறிய அவரது கணவரால் மத மாற்றம் செய்யப்பட்டனர். இது போன்ற ஒருதலைப்பட்சமான மத மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மே மாதம் 2009 ஆண்டில் நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் இன்று கூறினார்.

இந்திரா காந்தியின் மூன்று குழந்தைகளும் ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தை தாம் நாடாளுமன்றத்தில் எழுப்பியதாக கூறிய குலசேகரன், இந்த விவகாரம் கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகாலமாக மக்களின் கவனத்தை ஈர்த்த, மக்களால் விவாதிக்கப்பட்ட ஒன்றாக இருந்துள்ளது. இந்தத் தொல்லை மிகுந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணும் நோக்கத்தில் 2009 ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரையில் மூன்று அமைச்சரவை குழுக்கள் அமைக்கப்பட்டன என்று தெரிவித்தார்.

இறுதியாக, இன்று சட்டம் சீர்திருத்தம் சட்டத்திற்கு ஒருதலைப்பட்சமான மத மாற்றம் சம்பந்தப்பட்ட திருத்தங்கள் முதல் வாசிப்புக்காக 1 kulaநாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சட்ட திருத்தங்கள் அடங்கிய சட்டவரைவை தாம் வரவேற்பதாக தெரிவித்த அவர், இத்திருந்தங்களை அக்கறையோடு தாயாரித்து தாக்கல் செய்த அமைச்சர் அஸலினாவை பாராட்டினார்.

இச்சட்ட வரைவில் சர்ச்சைக்குரிய பிரச்சனைகள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து முழுமையாக விவாதிக்க இவ்விவகாரத்தில் ஈடுபாடு கொண்டுள்ள தமது சக வழக்குரைஞர்கள் குழுவுடன் ஏற்பாடுகள் செய்துவருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த சட்ட வரைவு நாடாளுமன்றத்தின் தற்போதைய அமர்விலேயே விவாதித்து ஏற்கொள்ளப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், இச்சட்ட வரைவை தாக்கல் செய்த சட்ட அமைச்சர் இது அடுத்த ஆண்டு மார்ச்/ஏப்ரலில்தான் விவாதிக்கப்படும் என்று கூறியது வருத்தமளிப்பதாக இருக்கிறது என்றார் குலா.

சம்பந்தப்பட்ட அமைச்சர் இந்த சட்ட வரைவை சற்று விரைவுப்படுத்தி இவ்விவகாரத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவார் என்று குலா நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திரா காந்தி இந்த ஒருதலைப்பட்சமான மத மாற்றம் குறித்து பல வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார். ஓரு வழக்கு பெடரல் நீதிமன்றத்தில் நவம்பர் 30 இல் தொடர்ந்து செவிமடுக்கப்படவிருக்கிறது. இவ்வழக்கு இந்திரா காந்தியின் மூன்று குழந்தைகளும் மத மாற்றம் செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை ரத்து செய்யக் கோருகிறது. இந்த வழக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக நீதிமன்றங்களில் இருந்து வருகிறது என்று குலா மேலும் கூறினார்.