இப்ராகிம் அலியின் நண்பராக இருப்பதற்கு வெட்கப்படும் மகாதிர்

 

Mashamedமலாய்க்காரர்களின் உரிமைக்காக போராடி வரும் பெர்காசாவின் தலைவர் இப்ராகிம் அலி தமது நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் தாம் வெட்கப்படுவதாக முன்னாள் பிரதமர் மகாதிர் கூறினார்.

“நான் வெட்கப்படுகிறேன். அவர் எனது நண்பர், ஆனால் அவர் பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவில் சேர மறுக்கிறார் ஏனென்றால் நாங்கள் டிஎபியுடன் நண்பர்களாக இருக்கிறோம்”, என்று மகாதிர் இன்று புத்ரா ஜெயாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

டிஎபி தீயது (“jahat”)என்று கூறிக்கொள்ளும் போது, அவர் டிஎபியை மசீசவுடன் ஒப்பிட்டு எது உண்மையிலேயே மிகத் தீயது என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

டிஎபி அரசமைப்புச் சட்டத்தை, மலாய் ஆட்சியாளர்களின் நிலையை, இஸ்லாம் நாட்டின் அதிகாரத்துவ சமயமாக இருப்பதை மதிப்பதாக பகிரங்கமாக அறிவித்திருக்கிறது என்று மகாதிர் சுட்டிக்காட்டினார்.

மசீசவும்  மஇகாவும் அவ்வாறு செய்துள்ளனரா என்று அவர் வினவினார்.

அடுத்த பொதுத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களை களமிறக்கும் பெர்காசாவின் திட்டம் பற்றி கருத்துரைக்கையில், இது அவர் பிரதமர் நஜிப்பிக்கு வேலை செய்கிறார் என்றாகும்.

“அவர் மலாய்க்காரர்களுக்காக போராடுவதாக நடிக்கிறார். அவர் டிஎபியுடன் வேலை செய்ய முடியாது, ஆனால் அவர் நஜிப்புடன் ஒத்துழைக்க முடியும், பணத்தைத் திருடும் யாரோ ஒருவருடன் ஒத்துழைக்க முடியும்”, என்று மகாதிர் மேலும் கூறினார்.

தாம் ஒரு பெர்காசா புரவலராக இருந்ததே இல்லை என்றும் மகாதிர் கூறினார்.

தொடர்பு கொண்ட போது, இப்ராகிம் அலி இது குறித்து நாளை ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தப் போவதாக கூறினார்.