மகளிர் அமைப்புகள் ‘மரியாவுக்காக நடைப்பயணம்’

mariaஇன்று    காலை   சுமார்  300  பேர்,  பெர்சே   தலைவர்   மரியா  சின்  அப்துல்லாவின்    விடுதலைக்காக    பாடாங்  மெர்மோக்கிலிருந்து   நாடாளுமன்றத்தை   நோக்கி  நடைப்பயணம்   சென்றனர்.

பல்வேறு  மகளிர்  அமைப்புகளைச்   சேர்ந்த    அவர்கள்   கருஞ்சிவப்பு,  பெர்சேயின்  மஞ்சள்  நிற  ஆடை  அணிந்து   காலை  மணி  10.45க்கு   நடைப்பயணத்தைத்   தொடங்கி    20  நிமிடங்களில்   நாடாளுமன்றத்தைச்   சென்றடைந்தனர்.

முதல்  வரிசையில்   நடந்து   சென்றவர்களில்   தேசிய   மனித  உரிமைக்  கழக (ஹகாம்)  தலைவர்   அம்பிகா  ஸ்ரீநிவாசன்,   உலகளாவிய  பெர்சே  இயக்கக்  குழு    உறுப்பினர்  ஐவி  ஜோசையா   ஆகியோரும்   இடம்பெற்றிருந்தனர்.

மரியா   பாதுகாப்புக்  குற்ற(சிறப்பு   நடவைக்கை)ச்  சட்டத்தின்கீழ்   தடுத்து   வைக்கப்பட்டிருப்பதற்குக்  கண்டனம்   தெரிவிக்கும்   மகஜர்  ஒன்றைத்   தற்போது   பெரு  நாடு   சென்றிருக்கும்   பிரதமர்   நஜிப்  அப்துல்   ரசாக்கிடம்   கொடுப்பதற்குத்தான்   அவர்கள்   அந்த  நடைப்பயணத்தை   மேற்கொண்டிருந்தனர்.

நாடாளுமன்றத்துக்குச்  சில  நூறு  மீட்டர்   தொலைவில்   மகளிர்   நடைப்பயணம்  முடிவுக்கு  வந்தது.  அவர்களின்   பிரதிநிதிகளாக   ஒரு   சிலர்    மட்டும்   மகஜரை   அமைச்சர்களிடம்  கொடுப்பதற்கு    நாடாளுமன்றத்துக்குள்  அனுமதிக்கப்பட்டனர்.