மலேசியப் பிரதமர் நஜிப் துன் ராசாக் தனது சுய அரசியல் நல்வாழ்வுக்காக இந்நாட்டின் எதிர்காலத்தை முற்றாக அழிக்கும் மற்றுமொரு முன்நகர்வை மேற்கொண்டுள்ளார் என்றால், அது மிகையாகாது என்றார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
தற்போது நடந்துகொண்டிருக்கும் அம்னோ பொதுப் பேரவையில் பிரதமர் ஆற்றியுள்ள உரைகளையும், அவர் பேராளர்களுக்கு வழங்கி வரும் வாய்மொழி உத்தரவாதங்களும் அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்றாரவர்.
நாட்டின் ஷரியா குற்றவியல் சட்ட விதி அமலாக்கத்தினை நடைமுறைப்படுத்த பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹடி அவாங் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள தனிநபர் மசோதாவை, இனிமேல் தனது அரசாங்கம் அதனுடையதாகத் தொடர்ந்து நடைமுறைக்கு எடுத்துச் செல்லும் என்ற நஜிப்பின் உத்தரவாதம், இனி வரும் காலங்களில் நாட்டில் இரண்டு விதமான குற்றவியல் சட்ட விதி முறைகள் அமலாக்கத்திற்குக் கொண்டு வரப்படும் என்பதன் பொருளாகும் என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
துங்கு அப்துல் ரஹ்மான், துன் சம்பந்தன் போன்ற சுதந்திரத் தலைவர்கள் இந்நாட்டு மக்களின் சமயம், சுதந்திரம், சட்டம், சமத்துவத்திற்கு வழங்கிய உத்தரவாதமும், சுதந்திரப் பிரகடனங்களையும் ஊதாசீனப்படுத்திய பெருமை இன்றைய அம்னோ அரசாங்கத்தையே சாரும் என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
நாட்டின் அனைத்து மக்களும், சமமாக ஒரே சட்டத்தின் கீழ் நடத்தப் படுவார்கள் என்று மலேசிய அரசியலமைப்பு சட்ட விதிகளில் வழங்கப்பட்டுள்ள உத்தரவாதத்திற்கும் முடிவு கட்டுவதாகப் பிரதமர் நஜிப்பின் செயல் அமைந்துள்ளதைக் கவனிக்கத் தவறக்கூடாது. நஜிப் தனது தனிப்பட்டத் தவறுக்காகவும் அரசியல் வாழ்வுக்காகவும் மலேசியர்களை அடமானம் வைத்துவிட்டார் என்றார் டாக்டர் சேவியர்.
நடப்பில் இருக்கும் ஒரே சட்ட விதி முறைகளுக்கே மரியாதையளிக்காமல் பாலர்பள்ளி ஆசிரியையான இந்திரா காந்தியின் குழந்தை வழக்கில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஒரு போலீஸ் படைத்தலைவராக இன்றைய போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் இருந்து வருவதை நாடு காண முடிகிறது. போலீஸ் படைத் தலைவர் சட்டத்தை மதித்து நடவடிக்கை எடுக்காததற்கு ஷரியா திருமணச் சட்டத்தைக் கவசமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் இரண்டு விதக் குற்றவியல் சட்டவிதிகள் ஒருங்கே அமல்படுத்தப்பட்டால், நாட்டின் நிலை எப்படி இருக்கும்?
பிரதமர் நஜிப்பின் 1 எம்டிபி ஊழலால் மலேசிய மக்கள் கடும் பொருளாதாரச் சுமையை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில், அவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்குத் தேவையான சூழ்நிலையை நாட்டில் உருவாக்க வேண்டியது பொறுப்பான ஓர் அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் பிரதமர் நஜிப்பின் செயலோ மக்களைப் பாழுங்கிணற்றில் தள்ளுவதாக இருக்கிறது என்றார் சேவியர்.
மலேசியா ஒரு வர்த்தக நாடாக உலகளவில் உருமாற்றம் கண்டு வருவதை நாம், அறிவோம். நமது அண்டை நாடுகள் அன்னிய முதலீடுகளைக் கவரும் வண்ணம் கவர்ச்சிகரமான சூழ்நிலைகளை உருவாக்கி வரும் வேளையில், வெளிநாட்டு முதலீடுகள் நம் நாட்டை விட்டு வெளியேறி வருகிறது.
நாமும் நமது பங்கிற்கு நாட்டை இன்றைய பொருளாதார மந்த நிலையிலிருந்து மீட்க, மலேசியாவை முக்கிய வர்த்தக, கல்வி, பொருளாதார, சுகாதார, சுற்றுலா மையமாக உயர்த்த அதிக உழைப்பையும், முற்போக்கு கொள்கைகளையும் உலகமயத்திற்கு ஏற்ப வெளிப்படையான அணுகுமுறை மற்றும் தொலைநோக்கம் ஆகியவற்றை கொண்டிருக்கவேண்டும்.
ஆனால், இக்கட்டான இன்றைய சூழ்நிலையிலும் மலேசியாவை மேலும் பிற்போக்கு நாடாக்கும் ஒரு செயல்,பல்லின, பல சமய நாட்டை குழப்பத்திற்கு இட்டுச் செல்லும் வண்ணம் முழு அளவில் இரண்டு விதக் குற்றவியல் சட்டவிதி அமலாக்கத்திற்கு விதை விதைத்துள்ளார் பிரதமர். இதனால், அதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும், எப்படிப்பட்ட குழப்பங்கள் நாட்டில் நிகழும் என்பதை நாம் சீர்தூக்கிப்பார்க்க வேண்டும்.
பிரதமர் தான் சிக்கியுள்ள 1 எம்டிபி ஊழல், மற்றும் பொருளாதாரச் சிக்கலை அரசியல் ரீதியாகச் சமாளிக்க முயற்சிக்கிறார். இதர எதிர்க்கட்சிகளுக்கும், பாஸ் கட்சிக்கும் இடையே உள்ள உறவைச் சீர்குலைத்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில் மும்முனை போட்டியை உருவாக்கவும், மலாய்க்கார வாக்காளர்களை கவரவும் இனங்களிடையே உள்ள இன, சமய மற்றும் பொருளாதார வேற்றுமைகளை அரசாங்கமே ஊதிப் பெரிது படுத்தும் ஓர் அபாயகரமான அணுகுமுறையை பிரதமர் கையாளுகிறார்.
இது நாட்டு மக்களுக்குத் திருமண, சமய விவகாரங்களில் மட்டுமின்றி, நாட்டில் எல்லாவற்றிலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். நாட்டின் எதிர்கால மேம்பாடு, கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு முதல் அடிப்படை குடும்ப அமைதிக்கும், தனிமனித உரிமைக்கும், பாதுகாப்புக்கும்கூடக் குந்தகம் ஏற்படுத்தும் என்ற தனது அச்சத்தை வெளியிட்டார் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
சொந்த நாட்டிலேயே அச்சத்துடன் வாழும் சூழ்நிலையை உருவாக்கிவிட்டார், அல்தான்துயா நஜிப். தான் ஈடுபட்டிருந்த முறையற்ற செயல்களை மூடிமறைக்க, மக்களின் எண்ணங்களை திசை திருப்ப, அபாயகரமான கட்டத்திற்கு, நாட்டை கொண்டு செல்கிறார், பிரதமர்.