டிஎபி மாநாட்டில் மகாதிர்!

 

MahathiratDAP1டிஎபியின் 50 ஆவது மாநாட்டிற்கு முன்னாள் பிரதமர் மாகாதிர் முகமட் திடீர் வருகையளித்தார்.

மாநாட்டு மேடையில் டிஎபியின் மூத்த நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சியாங், கட்சியின் நிறுவனரும் ஆலோசகருமான டாக்டர் சென் மான் ஹின் மற்றும் இதர தலைவர்களுடன் மகாதிர் அமர்ந்திருந்தார்.

பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிஸா, அமனா தலைவர் முகமட் சாபு ஆகியோரும் அம்மேடையில் இருந்தனர்.

22 ஆண்டுகளுக்கு அம்னோவின் தலைவராக இருந்த மகாதிர் டிஎபியின் பரம வைரியாக இருந்தார்.

ஆனால், இப்போது பெர்சத்துவின் தலைவர் என்ற முறையில் மகாதிருக்கு மாநாட்டில் பங்குபெற்ற 845 டிஎபி பேராளர்கள் பெருமகிழ்ச்சியுடன் கைத்தட்டி வரவேற்றனர். அதற்கும் மேலான வரவேற்பு பெர்சே இயக்கத்தின் தலைவர் மரியா சின் அப்துல்லாவுக்கு அளிக்கப்பட்டது.

டிஎபி மாநாட்டிற்கு வந்தது தமக்கு ஒரு புதிய அனுபவம் என்று பின்னர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறிய மகாதிர், டிஎபியின் மலேசியத்தன்மை பிஎன் மற்றும் அம்னோ ஆகியோருடையதைவிட வலுவானதாகத் தெரிகிறது. டிஎபி உறுப்பினர்களிடையில் சிலர் கருப்புத் தோல் உடையவர்கள் இருக்கிறார்கள், சிலர் கொஞ்சம் பழுப்பு நிறமானவர்கள், அனைவரும் மஞ்சளானவர்கள் இல்லை. இங்கு மூவினமும் இருக்கிறது என்று மகாதிர் கூறினார்.

“இது டிஎபி ஒரு சீனர் கட்சியல்ல என்பதைக் காட்டுகிறது. இது ஒரு பல்லினக் கட்சி, சீனர் அல்லாதவர்களும் உயர் பதவிகளை வகிக்கலாம் (காலஞ்சென்ற கட்சித் தலைவர்) கர்பால் சிங் மிக உயர்ந்த பதவியில் இருந்தார். தேசிய மொழியில் பேசுகின்றனர்.MahathiratDAP2

“ஆக, இது எனக்கு ஓர் அனுபவம்”, என்றாரவர்.

கடந்த காலத்தில் டிஎபி பற்றி தவறான எண்ணம் கொண்டிருந்ததை மகாதிர் ஒப்புக்கொண்டார்.

டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் டிஎபி அரசமைப்புச் சட்டத்தை, அரசமைப்புச் சட்டத்திற்கு தக்க முடியாட்சி, மலாய்க்காரர்களின் தனிப்பட்ட சமுதாயப்படிநிலை, தேசிய மொழி மற்றும் இஸ்லாத்தின் படிநிலை உட்பட, நிலைநிறுத்துகிறது என்று அவரது உரையில் வலியுறுத்தியிருந்ததை மகாதிர் பாராட்டினார்.

“நீங்கள் இதை எம்சிஎயில் காண முடியாது”, என்றும் மகாதிர் கூறினார்.