மலேசியாவும் சிங்கப்பூரும் கோலாலும்பூர்- சிங்கப்பூர் அதிவிரைவு இரயில் திட்ட(எச்எஸ்ஆர்) ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதை ஒத்தி வைக்க வேண்டும். அதில் கையொப்பமிடுவதற்குமுன் அத்திட்டம்மீது முழுமையான ஆய்வு ஒன்றை நடத்த வேண்டும் என பக்கத்தான் ஹராபான் கேட்டுக்கொண்டுள்ளது.
எதிர்காலத்தில் இரண்டு நாடுகளுமே எச்எஸ்ஆர் வழி வருமானத்தைப் பகிர்ந்து கொள்ளும் என்பதால் அதன் அடிப்படையில் அந்தக் கோரிக்கையை விடுப்பதாக பிகேஆர் பாயான் பாரு எம்பி சின் ட்ஸே ட்ஸின், அமனா கோலா கெராய் எம்பி ஹட்டா ரம்லி, டிஏபி செர்டாங் எம்பி ஒங் கியான் மிங் ஆகியோர் ஓர் அறிக்கையில் கூறினர்.
“வருமானத்தில் மலேசியாவின் பங்கையும் கட்டுமானச் செலவுகளை இரண்டு நாடுகளும் எவ்வாறு பிரித்துக்கொள்ளும் என்பதையும் விவரிக்கும் ஒரு நிதித் திட்டத்தை அரசாங்கம் பொதுமக்கள் முன்னிலையில் வைப்பது அவசியமாகும்”, என அவ்வறிக்கை குறிப்பிட்டது.
அத்திட்டத்துக்கான பெறப்படும் மொத்த கடன் பற்றிய விவரத்தையும் அது கொண்டிருக்க வேண்டும் என்று மூவரும் வலியுறுத்தினார்.