ரிக்டர் கருவில் 6.4 எனப் பதிவான நிலநடுக்கம் இந்தோனேசியாவின் ஆச்சே மாநிலத்தைத் தாக்கியதில் குறைந்தது 10 பேர் பலியானதாகவும் மேலும் பலர் காயமடைந்ததாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொலைக்காட்சி செய்திகளிலும் இணையத்தில் வலம் வரும் நிழற்படங்களிலும் தரைமட்டமாக்கப்பட்ட வீடுகளையும் இடிந்து விழுந்த கட்டிடங்களையும் காண முடிகிறது. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகள் பிடை ஜெயாவும் பிடையுமாகும். அங்கு வீடுகள், கடைகள், பள்ளிவாசல்கள் இடிந்து கிடக்கின்றன.
குறைந்தது 10 பேராவது பலியாகி இருக்கலாம், காயமடைந்தவர் பலர் என பிடை ஜெயா சிவில் பாதுகாப்பு நிறுவனத் தலைவர் கூறினார்.
ஆனால் , தேசிய பேரிடர் பொறுப்பு வாரியத்தின் பேச்சாளர் சுதோபோ நுக்ரோஹோ, ஒருவர் மட்டுமே பலியானது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்றார்.
“நால்வர், 18 பேர், 20 பேர் பலியானதாகக் கூட சொல்லப்படுகிறது. ஆனால், எனக்கு வந்து சேர்ந்த தகவலின்படி ஒரே ஒருவர் மட்டுமே பலியானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது”, என சுதோபோ கூறினார்.