மலேசிய ஆயுதப் படைத் தலைவர் சுல்கிப்ளி முகம்மட் ஸின் மியான்மார் சென்றது ஏன் என்பதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விளக்க வேண்டும் என்று பாஸ் உதவித் தலைவர் இஸ்கண்டர் அப்துல் சமட் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“அவர் (சுல்கிப்ளி) அங்கிருப்பது ஞாயிற்றுக்கிழமை பேரணியில் வெளிப்படுத்தப்பட்ட உறுதியான நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணாக உள்ளது.
“இப்படிப்பட்ட போக்கு (ரொஹிஞ்யாக்களைக்) கொல்வதையும் அடக்கி ஒடுக்குவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என மியான்மார் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகாது. நமது நாடு முஸ்லிம்களின் நலனுக்குக் குரல் கொடுப்பதில் அக்கறை கொண்டிருக்கவில்லை என்ற எண்ணத்தைதான் அது தோற்றுவிக்கும்.
“ஆயுதப்படைத் தலைவர் அந்நாட்டுத் தலைவர்களை எச்சரிக்க சென்றார் என்றால் அது வேறு விசயம்”, என இஸ்கண்டர் ஓர் அறிக்கையில் கூறினார்.