அகோங் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் உரிமை மகாதிருக்கு உண்டு. பேராசிரியர் அசிஸ் பாரி

 

azizமுன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் அகோங் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான அனைத்து உரிமைகளையும் பெற்றிருக்கிறார் என்று அரசமைப்புச் சட்டப் பேராசியர் அப்துல் அசிஸ் பாரி கூறுகிறார்.

“அகோங் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க மகாதிருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது என்பது உண்மையானால், ஆட்சியாளர்களின் மாநாடு அல்லது தேசிய அரண்மனை இவ்விவகாரத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

“முன்னாள் பிரதமர் மற்றும் துன் பட்டம் பெற்றவர் என்ற முறையில் மகாதிர் அங்கு இருப்பதற்கு அனைத்து உரிமைகளையும் பெற்றுள்ளார்”, என்று அசிஸ் பாரி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

அகோங் பதவி ஏற்பு ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும் என்று கூறிய அசிஸ் பாரி, அது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்றார்.