ஒருதலைப்பட்ச சிறார் மத மாற்றத்தை அனுமதிக்கும் சட்டத் திருத்தம் பெர்லிஸ் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

 

Perlisamendsபெர்லிஸ் சட்டமன்றம் இன்று ஒருதலைப்பட்ச சிறார் மத மாற்றத்தை அனுமதிக்கும் சட்ட திருத்தத்தை நிறைவேற்றியது. இஸ்லாமிய சமய நிருவாகச் சட்டம் 2006 க்கு செய்யப்பட்ட இதிருத்தம் பெற்றோரில் ஒருவர் ஒரு குழந்தையை இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்ய அனுமதிக்கிறது.

மலாய் மொழியில் இருக்கும் இச்சட்டத்திற்கு இந்தத் திருத்தம் செய்யப்பட்டது. முன்னதாக, இச்சட்டத்தில் 18 வயதை அடையாத ஒரு குழந்தை “தகப்பனார் மற்றும் தாயார்” ஆகிய இருவரின் அல்லது பாதுகாப்பாளரின் அனுமதியோடு இஸ்லாத்திற்கு மதம் மாறலாம் என்று வகைசெய்யப்பட்டிருந்தது.

இத்திருத்தத்தின் வழி செக்சன் 117 (b ) இல் கூறப்பட்டிருந்த “தகப்பனார் மற்றும் தாயார்” என்ற வார்த்தைகள் இப்போது “தகப்பனார் அல்லது தாயார்” என்று மாற்றப்பட்டுள்ளது என்று சின் சியு டெய்லி செய்தி கூறுகிறது.

இச்சட்டத் திருத்தத்திற்கு மசீச சட்டமன்ற உறுப்பினர் கா ஹோக் கோங் வாக்களிக்கவில்லை. பிகேஆர் உறுப்பினர் சான் மிங் காய் எதிர்த்து வாக்களித்தார்.

இதர சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், 12 அம்னோ மற்று ஒரு பாஸ், சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.