1953-இல் கட்டப்பட்ட ஒரு சீன ஆலயத்தை உடைக்கவும் அதன் பக்தர்களை வெளியேற்றவும் கெப்போங் மேம்பாட்டு நிறுவனம் தொடுத்துள்ள வழக்கில் தங்களையும் எதிர்வாதிகளாக சேர்த்துக்கொள்ள முன்னாள் உள்துறை துணை அமைச்சர் டான் சை ஹோ-வும் மேலும் 168 பக்தர்களும் மனு செய்திருக்கிறார்கள்.
அந்த மேம்பாட்டு நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள ஹோக் சுய் தோங் என்ற அவ்வாலயம் 2000-த்தில் சங்கப் பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டது.
அதை உடைப்பதற்கு அந்த நிறுவனம் விரும்புகிறது. ஆலயத்தின் பக்தர்கள் ஆலயத்தை உடையுங்கள் ஆனால், புதிய ஆலயம் கட்டுவதற்கு ஒரு ஏக்கர் நிலம் கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.
மேம்பாட்டு நிறுவனம் ஆலயத்தின் பூசாரி இங் ஆ சாங்கை மட்டுமே எதிர்வாதியாகக் குறிப்பிட்டு வழக்கு தொடுத்துள்ளது.
ஆலயத்தின் புரவலரான டான்னும் அதன் 168 பக்தர்களும் தங்களை இரண்டாவது எதிர்வாதியாக இணைத்துக் கொள்ள விரும்பினார்கள். அவர்களின் வழக்குரைஞர் பி.உதயகுமார் அதற்கான மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.