சிறீ லங்கா அதிபர் சிரிசேனாவின் மலேசிய வருகைக்கு டிஎபி கண்டனம் தெரிவிக்கிறது, பி. இராமசாமி

 

srisenaசிறீ லங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரிபாலா சிரிசேனா மலேசியாவுக்கு வருகை அளிக்குமாறு அழைக்கப்பட்டிருக்கிறார். கடந்த செம்டெம்பர் 2016 இல் இங்கு வருகையளித்திருந்த அன்றைய சிறீ லங்கா அதிபர் மஹிந்த ராஜபக்சேவுக்கு டிஎபி கடும் கண்டம் தெரிவித்திருந்தது.

அந்தக் கொடுங்கோலர் மஹிந்தா மலேசியாவுக்கு வந்து இன்னும் மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் பின் அரசாங்கம் இன்னொரு சிறீ லங்கா அதிபருக்கு அழைப்பு விடுத்துள்ளது. இவர் மஹிந்த ராஜபக்சேயின் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்.

சிரிசேனா மலேசியாவில் மூன்று நாட்களுக்கு, டிசம்பர் 15 லிருந்து 17 வரையில், தங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சிறீலங்கா அதிபர் சிரிசேனா சிறீ லங்கா உணவு மற்றும் கலாச்சார விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார். சிறீலங்கா ஹைகமிஷன் அதற்கான அழைப்புகளை அனுப்பி விட்டது. அந்நிகழ்ச்சி கோலாலம்பூர், அம்பாங், இண்டர்கொண்டினென்டல் ஹோட்டலில் நடைபெறவிருக்கிறது.

அதிபர் சிரிசேனா மலேசியா அரசாங்கத்துடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று மாதங்களுக்கு முன்பு செப்டெம்பரில், கோலாலம்பூரில் நடந்த ஓர் அனைத்துலக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிறீலங்கா முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே அழைக்கப்பட்டிருந்தார்.

மலேசியாவிலுள்ள தமிழர் அமைப்புகள் மஹிந்தாவின் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். அவர் புரிந்த “போர்க் குற்றங்கள்” கடுமையாக விமர்சிக்கப்பட்டன. சிறீ லங்காவிலுள்ள தமிழர்கள் மற்றும் அவர்களின் இலட்சியத்திற்கு ஆதரவு அளித்த இந்நாட்டு தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் மஹிந்தாவை இங்கு அழைத்ததற்காக பிஎன் அரசாங்கம் கண்டிக்கப்பட்டது.

மலேசியத் தமிழர்கள் வெளிப்படுத்திய ஆட்சேபங்களையும் வெறுப்பையும் சற்றும் பொருட்படுத்தாமல் அவர்களுடைய உணர்வுகளைச் சுட்டெரிக்கும் போக்கில் பிஎன் அரசாங்கம் சிறீ லங்காவின் தற்போதைய அதிபர் சிரிசேனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ramasamyஇனம் மற்றும் சமயம் ஆகியவற்றுக்கு அப்பால் மனித உரிமைகள் விவகாரத்தில் டிஎபி மிக உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. டிஎபிதான் சிறீ லங்கா தமிழர்களின் அவலநிலை குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது.

சிறீ லங்கா தமிழர்கள் அனுபவிக்கும் துயரங்கள் பற்றி அக்கறை காட்டாத பிஎன் அரசாங்கத்தை டிஎபி வன்மையாகக் கண்டிக்கிறது.

சிரிசேனாவின் மலேசிய வருகை அறிவிக்கப்பட்டிருந்தும் மலேசிய இந்தியத் தலைவர்கள், மஇகாவோ, இதர இந்திய இந்தியக் கட்சிகளோ, எவரும் இவ்வருகைக்கு கண்டனம் தெரிவிக்க முன்வரவில்லை.

பினாங்கு மாநில துணை முதலமைச்சர் II பி. இராமசாமி மேற்கண்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்.