பாஸ் ஒரு குழப்பமான கட்சி. பாஸ் கட்சி அதன் குழப்பத்திலிருந்து விடுபட்ட பின்னர்தான் அக்கட்சியுடன் ஒத்துழைப்பதா என்பதை பெர்சத்து முடிவு செய்யும் என்று அதன் தலைவர் மகாதிர் முகம்மட் இன்று கூறினார்.
அடுத்தப் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் யாருடன் ஒத்துழைக்கப் போகின்றன – பாஸுடனா அல்லது அமனாவுடனா – என்பதை தேர்வு செய்யும்படி பாஸ் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
“ஒரு பக்கத்தில், பாஸ் எதிர்க்கட்சி என்று அவர்கள் கூறுகிறார்கள். மற்றொரு பக்கத்தில், மற்றொன்றுடன், அம்னோ, முத்தமிட்டுக்கொள்கிறார்கள்” என்று கூறிய மகாதிர், டிஎபியும் அமனாவும் இடம்பெற்றுள்ள சிலாங்கூர் அரசாங்கத்தில் பாஸ் கட்சியும் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“அவர்கள் மிகவும் குழப்பமானவர்கள். அவர்கள் குழப்பத்திலிருந்து விடுபடும் வரையில் நான் காத்திருக்க வேண்டும்”, என்று அவர் மேலும் கூறினார்.
பெர்சத்து, பக்கத்தான் ஹரப்பானில் உறுப்பினரானால் பாஸ் அக்கட்சியுடன் எவ்வித உறவும் வைத்துக்கொள்ளாது என்று பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தாக்கியுடின் கூறியுள்ளார்.