சிறார் மத மாற்ற சட்டத் திருத்தம்: புத்ராஜெயாவுக்கு போதுமான வாக்குகள் கிடைக்காமல் போகலாம்

 

conversionnotenoughvoteஒருதலைப்பட்ச சிறார் மத மாற்றத்தை முடிவுக்கு கொண்டு வர புத்ராஜெயா பெடரல் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கு ஒப்புக்கொண்டிருக்கலாம். ஆனால் அதைச் செய்வதற்கு அதற்கு நாடாளுமன்றத்தில் போதுமான வாக்குகள் கிடைக்காமல் போகலாம் என்று அரசமைப்புச் சட்ட வல்லுநர் அப்துல் அசிஸ் பாரி கூறுகிறார்.

இதனைச் செய்வதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அல்லது 148 வாக்குகள் தேவைப்படுகின்றன. ஆனால், பிஎன்னுக்கு 132 வாக்குகளே இருக்கின்றன.

எதிரணியிடமிருந்து 16 கூடுதல் வாக்குகள் பெறுதல் சிரமமானதல்ல. பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், சிலர் இதில் அதிக அக்கறையில்லாமல் இருக்கலாம், இதற்கு கட்டுப்பட வேண்டும்.

ஆனால், பிஎன் இதனைச் செய்யும் என்பதில் அசிஸுக்கு நம்பிக்கை இல்லை.

ஷரியா நீதிமன்ற அதிகாரம் சம்பந்தப்பட்ட மிகச் சாதாரண, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு தேவைப்படாத, சட்டத் திருத்தத்தை   அரசாங்கத்தால் கையாள முடியவில்லை என்று அசிஸ் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

இன்னொரு எடுத்துக்காட்டு, பெர்லிஸ் மாநில அரசு ஒருதலைப்பட்ச மத மாற்றத்தை அனுமதிக்கும் எதிர்மாறான கொள்கையை முன்வைத்துள்ளது என்றார் அசிஸ்.

நேற்று, பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஓத்மான் சைட் சிறார்கள் மத மாற்றம் செய்யப்படுவதற்கு இரு பெற்றோர்களின் ஒப்புதலைக் கட்டாயம் பெற வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறுவதற்காக அரசமைப்புச் சட்டம் பிரிவு 12(4) ஐ திருத்துவதற்கு அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது என்று கூறியுள்ளதை அசிஸ் சுட்டிக்காட்டினார்..

இந்த அறிவிப்பு அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சட்ட சீர்திருத்தம் (மண மற்றும் மண விலக்கு) (திருத்தம்) மசோதா 2106 க்கும் கூடுதலானதாகும். இத்திருத்தம் பெற்றோரில் ஒருவர் இஸ்லாத்திற்கு மதம் மாறினால், அவர்களின் குழந்தையின் மத மாற்றத்திற்கு இரு பெற்றோர்களின் ஒப்புதல் இல்லை என்றால் அக்குழந்தை அதன் முதலாவதான மதத்திலேயே இருக்க வேண்டுமென்று கூறுகிறது.

 

இது ஒரு தந்திரமா?

 

எனினும், சட்டங்கள் இயற்றப்படுவதில் காணப்படும் சவால்கள் காரணமாக இந்த முன்மொழியப்பட்டுள்ள அரசமைப்புச் சட்டத் திருத்தம் ஒரு “தந்திரமா” என்று அசிஸ் வினவினார்.

“முஸ்லிம் அல்லாதவர்களை சமாதானப்படுத்துவதற்காக அமைச்சர்கள் மேலெழுந்தவாறான சம்மதங்களை தெரிவிக்கும் அதே நேரத்தில் தங்களுடைய புழக்கடையைச் சுத்தமாக வைத்திருக்க தவறி விடுவதை விட இந்த விவகாரத்தில் (அனைத்து மாநிலங்களிலும்) வேறுபாடற்ற நிலைப்பாட்டை கொண்டிருப்பது அம்னோவுக்கு சிறப்பாகும்”, என்று அசிஸ் பாரி மேலும் கூறினார்.