துவாங்கு அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா-வும் துவாங்கு ஹாஜா ஹமினாவும் ஐந்தாண்டுக்காலம் பேரரசராகவும் பேரரசியாகவும் பதவி வகித்துவிட்டு இன்று சொந்த மாநிலமான கெடாவுக்குத் திரும்பினர்.
துவாங்கு அப்துல் ஹாலிம், 89, 2012 ஏப்ரல் 11-இல் மாட்சிமை தங்கிய பேரரசராக பதவியேற்றார்.
பேரரசர் தம்பதிகளுக்கு நாடாளுமன்றச் சதுக்கத்தில் சகல அரச மரியாதைகளுடன் வழியனுப்புச் சடங்கு நடைபெற்றது.
நாடாளுமன்றச் சதுக்கம் வந்து சேர்ந்த பேரரசர் தம்பதிகளைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரும் வரவேற்றனர். பேரரசரின் பிரசன்னத்தைக் குறிக்க நாட்டுப்பண் இசைக்கப்பட்டு 21 மரியாதைக் குண்டுகள் போடப்பட்டன.
இராணுவத்தினரின் மரியாதை அணிவகுப்பையும் பேரரசர் பார்வையிட்டார்.
பின்னர், அங்கு கூடியிருந்த அமைச்சர்கள், அரசாங்கத் துறைத் தலைவர்கள், வெளிநாட்டுத் தூதர்கள் ஆகியோருடன் பிரியாவிடை பெற்றுக்கொண்ட கைகுலுக்கி பேரரசர் தம்பதிகள் கேஎல் அனைத்துலக விமான நிலையத்துக்குப் புறப்பட்டனர்.
அரச வாகனம் ஜாலான் நாடாளுமன்றம் வழியாக சென்றபோது அந்தச் சாலையின் இரு மருங்கிலும் பொதுமக்கள் கூடிநின்று பேரரசர் தம்பதிகளை வழியனுப்பி வைத்தனர்.