டிரம்ப்: அமெரிக்கா “ஒரே சீனா” கொள்கையைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

 

DTrump தைவான் “ஒரே சீனாவின்” ஒரு பகுதி என்ற அமெரிக்காவின் நீண்டகால கொள்கையைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் “ஒரே சீனா” கொள்கை குறித்து டிரம்ப் கூறியுள்ள கருத்து சீனாவின் எதிர்ப்பைத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 2 இல், டிரம்ப் தைவான் அதிபரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு சீனா ஆட்சேபம் தெரிவித்திருந்தது பற்றி அவர் இக்கருத்தை வெளியிட்டார்.

“நான் ‘ஒரே சீனா’ கொள்கையை நன்கு அறிவேன். ஆனால், சீனாவுடன் நமக்கு இதர நடவடிக்கைகள், வர்த்தகம் உட்பட, பற்றிய பேரங்கள் இருந்தாலன்றி, நாம் ஏன் ‘ஒரே சீனா’ கொள்கைக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை”, என்று டிரம்ப் போக்ஸ் நியூஸ் சண்டேயிடம் கூறினார்.

1979 ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் தைவானை உதறித்தள்ளி விட்டு சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்ட பிறகு, ஓர் அமெரிக்க அதிபர் அல்லது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் தைவானுடன் தொடர்பு கொண்டது இதுவே முதல்தடவை ஆகும்.

சீனாவுக்கு தைவான் ஓர் உணர்ச்சிபூர்வமான விவகாரமாகும். தைவானை ஒரு துரோகியாக சீனா கருதுகிறது.

டிரம்ப் தெரிவித்திருக்கும் கருத்து பற்றி சீன அதிகாரிகளியிடமிருந்து உடனடியான எதிர்வினை ஏதுமில்லை.