முகைதினின் சமரச முயற்சியை பாஸ் ஏற்கவில்லை

pasஅடுத்த  பொதுத்    தேர்தலில்       பிஎன்னுக்கு      எதிராக     ஒன்றுபட்ட      எதிரணியை      உருவாக்குவதற்காக,   பாஸ்,   டிஏபி,  அமனா   ஆகியவற்றுக்கிடையில்   சீர்கெட்டுக்   கிடக்கும்   உறவுகளைச்   சீர்படுத்திக்  கொடுக்க      பார்டி   பிரிபூமி  பெர்சத்து   மலேசியா    முன்வந்தது.

சிலாங்கூர்   பாஸ்   ஏற்பாடு    செய்திருந்த   ‘மெகா   செராமா  ரக்யாட்’   நிகழ்வில்   பெர்சத்து   அந்த   யோசனையை    முன்வைத்தது.

ஆனால்,  அதன் முயற்சியை   பாஸ்    துணைத்    தலைவர்    துவான்  இப்ராகிம்   துவான்   மாட்    ஏற்கவில்லை.

அந்த  இஸ்லாமிய   கட்சியால்     அமனாவுடனும்   டிஏபியுடனும்    உறவு  வைத்துக்  கொள்ள  இயலாது    என்று  அவர்    கூறிவிட்டார்.

“பாஸ்ஸுக்கு   பிகேஆருடன்   உறவு  உண்டு.   பெர்ச்த்துவுடன்    தொடர்ந்து    பேச்சு    நடத்தி   வருகிறோம்”,  என  செராமா  நிகழ்வுக்குப்   பின்னர்    ஊடகங்களிடம்   பேசிய    துவான்  இப்ராகிம்    கூறினார்.

மற்ற    கட்சிகளுடன்     கருத்திணக்கம்   காண்பதற்குமுன்     அல்லது   ஒத்துழைப்பதற்குமுன்   அவை  பாஸின்  70  இடங்களில்    போட்டியிடக்   கூடாது     என்ற    நிபந்தனையை     ஏற்க    வேண்டும்    என்றாரவர்.

“இது      ஒரு  கட்டாய   நிபந்தனையாகும்.  ஒவ்வொரு   முறையும்   நாங்கள்தான்   எங்கள்  தொகுதிகளை (மற்ற   கட்சிகளுக்கு)   விட்டுக்  கொடுத்து    வந்திருக்கிறோம்.  போதும்.  போதும்.  இனி,  விட்டுக்கொடுப்பதற்கில்லை”,  என்று   துவான்  இப்ராகிம்   குறிப்பிட்டார்.

பெர்சத்து   தலைவர்   முகைதின்  கடந்த   ஒரு   வாரமாக     பாஸ்   தலைவர்    அப்துல்   ஹாடி    ஆவாங்குடனும்   துணைத்   தலைவர்   துவான்  இப்ராகிமுடனும்    பேச்சு     நடத்தி   வந்தார்.  எப்படியாவது   பாஸை    எதிரணியில்    இணைப்பதற்கு  முயன்றார்.

பாஸ்    பிஎன்னுக்கு      எதிராக    தனித்துப்  போட்டியிட்ட   போதெல்லாம்    அது   தோல்வி   கண்டு   வந்துள்ளதைச்   சுட்டிக்காட்டி    அவர்    எச்சரித்தார்.

தொகுதி   உடன்பாடு   காண்பதோடு   நின்று   விடாமல்     தேர்தலில்     வென்றால் அடுத்த   அரசாங்கத்தை    அமைப்பது  குறித்தும்    பேசலாம்    என்றும்   முகைதின்   கூறினார்.

“பாஸுக்கும்   அமனாவுக்கும்    பெரிய    பிரச்னை   இருக்கிறது.   பாஸ்  கொள்கை   டிஏபி  கொள்கையினின்றும்   மாறுபட்டது.   ஆனால்,  பெர்சத்துவுக்கு   யாருடனும்    பிரச்னை  இல்லை.  அதனால்,  ஓர்   உறவுப்பாலமாக    இருக்கலாமே     என்று  நினைத்தோம்.

“அதில்    உங்களுக்கு    விருப்பமில்லை    என்றால்,   பரவாயில்லை”,  என  முகைதின்     செய்தியாளர்களிடம்    தெரிவித்தார்.

இதனிடையே,  அடுத்த   பொதுத்   தேர்தலில்    ஒத்துழைப்பு    எப்படி   என்பதை   விவாதிக்க    பக்கத்தான்  ஹராபானும்   பெர்சத்துவும்   இன்று   கூடுகின்றன.