கைருடின், மாத்தியாஸ் சோஸ்மா சட்டத்தின் கீழ் விசாரிக்க கோரும் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது

 

Thrownoutபத்து கவான் அம்னோ முன்னாள் உதவித் தலைவர் கைருடின் அபு ஹசான் மற்றும் அவரது வழக்குரைஞர் மாத்தியாஸ் சாங் ஆகிய இருவரையும் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கை) சட்டம் 2012 (சோஸ்மா) இன் கீழ் விசாரிக்க அரசு தரப்பு வழக்குரைஞர் செய்திருந்த மேல்முறையீட்டை மேல்முறையீடு நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

அரசாங்க வழக்குரைஞரின் மேல்முறையீட்டில் நற்கூறுகள் ஏதும் இல்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டது.

நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஏகமனதாக அரசாங்க மேல்முறையீட்டை நிராகரித்ததோடு கடந்த ஆண்டு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிலைநிறுத்தியது.

இத்தீர்ப்பை பெடரல் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தாலன்றி, கைருடினும் சாங்கும் குற்றவியல் நடைமுறை சட்டவரையறை மற்றும் சாட்சியம் சட்டம் 1950 இன் விசாரிக்கப்படுவர், சோஸ்மாவின் கீழ் அல்ல.

அவர்கள் விசாரணை முடியும் வரையில் பிணையில் இருப்பார்கள். வங்கி மற்றும் நிதிக் கழகங்களை கீழறுக்கும் முயற்சிகளை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.