பெர்காசா: மலாய்த் தலைவர்கள் கிறிஸ்துவர் வாக்குகளுக்காக “தவியாய்த் தவிக்கிறார்கள்”

பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த மலாய்த் தலைவர்கள் கிறிஸ்துவர் வாக்குகளைப் பெறத் “தவியாய்த் தவிக்கிறார்கள்” என்றும் அதற்காக “இஸ்லாத்தின் கண்ணியத்தையே விற்கிறார்கள்” என்று மலாய் உரிமைக்காக போராடும் அமைப்பான பெர்காசா வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இம்மாதத் தொடக்கத்தில் பெட்டாலிங் ஜெயா தேவாலயம் ஒன்றில் மதமாற்ற நடவடிக்கையின் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனை உள்பட பல்வேறு விவகாரங்களில் அம்னோ, பாஸ், பிகேஆர் தலைவர்கள் மெளனமாக இருப்பதிலிருந்து இது தெரிகிறது என்று பெர்காசா தலைமைச் செயலாளர் சையட் ஹசான் சையட் அலி கூறினார்.

“கட்சி கோணத்திலிருந்து சிந்திப்பதை நிறுத்துங்கள். முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுபட்டு கிறிஸ்துவர் வாக்குகளைத் தேடி அலைவதை நிறுத்த வேண்டும்.

“இஸ்லாத்தின் கண்ணியத்தை விற்று கிறிஸ்துவர் வாக்குகளைப் பெற அவர்கள் தவியாய்த் தவிப்பது ஏன்?” இன்று தேசிய பள்ளிவாசலுக்குமுன் நடைபெற்ற பெர்காசா ஆர்ப்பாட்டமொன்றில் அவர் கேள்வி எழுப்பினார்.