சீனாவின் தைவான் விவகார அலுவலகம், “ஒரே சீனா” கொள்கையில் மாற்றம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் அது தைவான் நீரிணையில் அமைதியையும் நிலைத்தன்மையையும் கெடுக்கும் என்று எச்சரித்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டோனல்ட் ட்ரம்ப் தைவான் அதிபர் ட்சாய் இங்-வென்னுடன் தொலைபேசி வழி பேசியதற்கே ஆத்திரங் கொண்டிருக்கும் சீனா, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் தைவானை சீனாவின் ஒரு பகுதி என்ற நீண்டகாலக் கொள்கையை அமெரிக்க தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருப்பதைக் கேட்டு மேலும் சினமடைந்துள்ளது.
சீனா, தைவானைத் தன்னுடைய மாநிலங்களில் ஒன்றாகவே கருதிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ட்ரம்பின் கூற்று குறித்து கடும்
அதிருப்தியை சீனா வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
சீனாவின் தைவான் விவகார அலுவலகப் பேச்சாளர் என் பெங்சான், தைவான் விவகாரம் சீனாவின் இறையாண்மை மற்றும் பிரதேச ஒற்றுமை சம்பந்தப்பட்ட ஒன்று என்றார்.
“ஒரே சீனக் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதே அமெரிக்க- சீன உறவுகளின் வளர்ச்சிக்கு உதவும் அதுவே தைவான் நீரிணையில் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் அடிப்படையாக விளங்கும்”, என்று கூறினார்.