டாவோ சிட்டி மேயராக இருந்த போது, ‘சொந்தக் கைகளால்’ குற்றவாளிகளைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட்டேமீது குற்றஞ்சாட்டப்படும் அபாயமிருப்பதாக பிலிப்பீன்ஸ் செனட்டர்கள் இருவர் தெரிவித்தனர்.
திங்கள்கிழமை மணிலாவில் வணிகர்கள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் பேசிய டுடெர்ட்டே, டாவோ சிட்டியின் மேயராக இருந்த போது குற்றவாளிகளைக் கொல்லும் நோக்கில் பெரிய மோட்டார் சைக்கிளில் வீதிவலம் வருவது வழக்கம் என்றும் உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தன்னால் செய்ய முடியும் என்பதைக் காட்ட அவ்வாறு செய்ததாகவும் கூறினார்.
“நானே செய்திருக்கிறேன். என்னால் முடியும் என்கிறபோது உங்களால் ஏன் முடியாது?” என்று டுடெர்டே அக்கூட்டத்தில் வினவினார்.
கடந்த ஜூலை மாதல் டுடெர்டே அதிபரானதிலிருந்து இதுவரை போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈராயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவருமே கைது செய்யப்படுவதைத் தவிர்க்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.
டுடெர்ட்டேயை அதிகம் குறைகூறும் செனட்டாரான லெய்லா டி லிமா அதிபர் தாமே ஒப்புக்கொண்டதை வைத்து அவர்மீது குற்றஞ்சாட்டப்படும் சாத்தியம் உண்டு என்றார்.
“அது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்குத் துரோகமிழைப்பதாகும். படுகொலைகள் என்பது கடும் குற்றப் பிரிவின் கீழ் வரும். பெரும் குற்றங்கள்மீது அரசமைப்பின்படி விசாரணை நடத்தலாம்”, என்றார்.
நீதிக்குழுவுக்குத் தலைவராக உள்ள செனட்டர் ரிச்சர்ட் கோர்டனும் அதிபர் டுடெர்டேயின் சர்ச்சைக்குரிய பேச்சின் காரணமாக அவர்மீது விசாரணை மேற்கொள்ள வாய்ப்புண்டு என்றார்.