சரவாக் ரிபோர்ட் ஆசிரியருக்கு சட்டரீதியான நோட்டீஸ் பாஸ் அனுப்பியுள்ளது

 

pasnoticeபிரதமர் நஜிப்பிடமிருந்து ரிம90 மில்லியனை பாஸ் கட்சி பெற்றுக்கொண்டுள்ளது என்று சரவாக் ரிபோர்ட்டின் ஆசிரியர் கிளேர் ரியுகாசல்-பிரௌன் கூறிக்கொண்டதற்காக அவருக்கு சட்டரீதியான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் கூறினார்.

அக்கடிதம் கடந்த செவ்வாய்க்கிழமை ரியுகாசலின் லண்டன் முகவரில் சார்பு செய்யப்பட்டது.

பாஸ் அனுப்பியுள்ள கடிதத்தில் மூன்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன:
பாஸ் ரிம90 மில்லியனை பிரதமர் நஜிப்பிடமிருந்து பெற்றதாகக் கூறும் கட்டுரையை சரவாக் ரிபோர்ட் அகற்ற வேண்டும்;

பாஸ் கட்சியால் ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளுக்கு ஏற்ப மன்னிப்புக் கோர வேண்டும்.

சரவாக் ரிபோர்ட் எதிர்காலத்தில் இதுபோன்ற கூற்றுகளை வெளியிடாது என்று உறுதியளிக்க வேண்டும்;

இச்சட்ட நடவடிக்கை பாஸ் மற்றும் அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பெயரில் எடுக்கப்பட்டுள்ளதாக தாக்கியுடின் தெரிவித்தார்.

சரவாக் ரிபோர்ட் அதன் ஆகஸ்ட் 6, கட்டுரையில் ரிம90 மில்லியன் பாஸ் கட்சியின் மேல்மட்டத்தினரிடம் சென்றடைந்துள்ளாக எழுதியிருந்தது.

பாஸ் கட்சி இக்கூற்றை வன்மையாக மறுத்ததுடன் லண்டனை தளமாகக் கொண்டுள்ள ரியுகாசல்-பிரௌன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சூளுரைத்திருந்தது.