மலேசியாவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழும் அபாயம் இருப்பதை நம்மில் பலர் உணர்வதில்லை.
நாட்டில் அமைதியும் பாதுகாப்பும் நிலவுகிறது. நம் அன்றாடப் பணிகளைத் தாராளமாக செய்ய முடிகிறது. அதனால் அந்த அபாயத்தை நாம் உணர்வதில்லை.
ஒரே ஒரு தடவை, ஜூன் 28-இல், பூச்சோங் கேளிக்கை விடுதி ஒன்றில் கை எறிகுண்டு வெடித்து எண்மர் காயமடைந்தபோதுதான் அது மலேசிய மண்ணில் ஐஎஸ் தாக்குதல் நடத்திய சம்பவம் என்பதை நாம் அறிந்து கொண்டோம்.
ஆனால், நமக்குத் தெரியாமல் எவ்வளவோ நடந்துள்ளன. தாக்குதல்கள் அல்ல. தாக்குதல்கள் முறியடிக்கப்பட்ட சம்பவங்கள். மலேசியாவில் குறைந்தது 14 ஐஎஸ் பயங்கரவாதத் திட்டங்களை முறியடித்திருப்பதாக பயங்கரவாத- எதிர்ப்புப் படை அதிகாரி ஒருவர் கூறினார்.
அது குறித்து பாதுகாப்புக் காரணங்களுக்காக விவரமாக விளக்கமளிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் தயங்குகிறார்கள்.
சரி, அதிகாரிகள் எப்படி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் முயற்சிகளை முறியடித்தார்கள்?
பயங்கரவாதிகளுக்குப் பணம் கிடைப்பதைத் தடுப்பது ஒரு வழிமுறையாகும். பணம் கிடைக்கா விட்டால் அவர்கள் ஆயுதங்கள், வெடிமருந்துகள் முதலியவற்றைப் பெற முடியாமல் போய்விடும் என கூட்டரசு போலீஸ் (புக்கிட் அமான்) சிறப்புப் பிரிவு இயக்குனர் முகம்மட் புசி ஹருன் கூறினார்.
“தனிப்பட்டவர்கள் (தீவிரவாதிகளுக்கு) பணம் அனுப்புகிறார்களா என்பதைக் கண்காணித்து வருகிறோம், பணம் அனுப்புவதைத் தடுத்தும் வருகிறோம். மற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் அளிக்க இயலாது”, என்றவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
அனைத்துலக அளவில் உளவுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதும் பாரிஸ், புருஸ்ஸல்ஸ், இஸ்தான்புல் ஆகிய நகரங்களில் நிகழ்ந்தது போன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் மலேசியாவில் நிகழாத வண்ணம் தடுப்பதற்கு உதவியுள்ளது.
அனைத்துலக அளவில் ஐஎஸ்ஸை முறையடிப்பதற்காக போராடிவரும் பல்வேறு அமைப்புகளுடனும் அரச மலேசிய போலீஸ் தொடர்பு வைத்துள்ளது.
2013-இலிருந்து இதுவரை ஐஎஸ் நடவடிக்கைகளுடன் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகிக்கப்படும் 260 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் உள்நாட்டவரும் உண்டு; வெளிநாட்டவரும் உண்டு.
பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசாங்கமும் முழுக் கடப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது. பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு தேசிய சிறப்பு நடவடிக்கைப் படை (என்எஸ்ஓஎப்) அமைக்கப்பட்டிருப்பதே இதற்குச் சான்று.
அக்டோபர் 27-இல், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கால் தொடக்கி வைக்கப்பட்ட என்எஸ்ஓஎப்-இல் ஆயுதப்படைகளையும் போலீசையும், மலேசியக் கடல் போக்குவரத்து சட்ட அமலாக்க அமைப்பையும் சேர்ந்த 17 அதிகாரிகளும் 170 வீரர்களும் உள்ளனர்.
14 பயங்கரவாத தாக்குதல்களா ? 14 போராளிகள் தாக்குதல்களா ?
என்று விசாரிக்காமல் போலீஸ் இப்படி அறிக்கைகளை வெளியிட்டு அரசாங்கத்தை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்க கூடாது.