எம்ஆர்டி திட்டத்துக்கான மொத்த செலவு ரிம100 பில்லியனைத் தாண்டலாம் என்று தான் கொண்டிருந்த அச்சத்தைப் பிரதமர் தம்மை அறியாமலேயே உறுதிப்படுத்தி விட்டார் என பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி கூறினார்.
“நேற்றிரவிலிருந்து அம்னோ இணையத்தள பிரச்சாரக் குழுக்கள் எம்ஆர்டி-இன் உண்மையான செலவு ரிம21 பில்லியன் மட்டுமே என்றும் நான் இதற்குமுன் கூறிவந்துள்ளதைப் போல் ரிம100 பில்லியன் அல்லவென்றும் சமூக வலைத்தளங்களில் ஊடகப் பரப்புரையைத் தொடங்கி யிருக்கிறார்கள்.
“ஆனால், அவர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ரிம 21பில்லியன் என்று அறிவித்தது முதல் கட்டத்துக்கு ஆன செலவு மட்டுமே என்பதை உணரவில்லை.
“உண்மையில், பிரதமரின் அறிவிப்பு) எம்ஆர்டிக்கான மொத்த செலவு ரிம100 பில்லியனை எட்டும் என்று 2012-இலேயே நான் தெரிவித்த அச்சத்தை உறுதிப்படுத்தி விட்டது”, என ரபிசி ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
நஜிப், 2010-இல் பொருளாதார உருமாற்றத் திட்ட(இடிபி)த்தைத் தொடக்கி வைத்து எம்ஆர்டி திட்டத்தை அறிவித்தபோது மொத்தத் திட்டமும் 141கிமீட்டரை உள்ளடக்கியது என்று கூறினார்.
நஜிப் ரிம21 பில்லியன் செலவானதாகக் குறிப்பிட்டது 141 கிலோமீட்டரில் 21 கிலோமீட்டருக்கு ஆன செலவு மட்டுமே. அதாவது , அது மொத்த திட்டத்தில் 15 விழுக்காட்டுக்கு மட்டுமே ஆன செலவு.
ஒரு சிறிய கணக்கு போட்டுப் பார்த்தால், முதல் கட்டத்துக்கு ஆன இந்தச் செலவே தொடரும் பட்சத்தில் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரிம1 பில்லியன் செலவாகும்.
அந்த வகையில் மீதமுள்ள 120 கிலோமீட்டரையும் கட்டி முடிக்க ரிம 120 பில்லியனாகும்.
“ஆக, பாபாகோமோ, ராஜா பெட்ரா (கமருடின்), லிம் சியான் சீ ஆகியோரை உள்ளடக்கிய அம்னோ இணையத்தளப் பிரச்சாரக் குழுவுக்கு இது புரியவில்லை”, என ரபிசி கூறினார்.
மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும் 141 கிமீட்டரை உள்ளடக்கிய மொத்த எம்ஆர்டி திட்டத்துக்கும் ரிம100 பில்லியனுக்குமேல் செலவாகும் என்பதை அடுத்ததடுத்த அறிக்கைகளில் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கப் போவதாக அவர் குறிப்பிட்டார்.
2011-இல் எம் ஆர்டி திட்டம் பற்றி அறிவித்த நஜிப் அதற்கு ரிம40 பில்லியன் செலவாகலாம் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டேய் நீங்க செய்யும் எதிலில் ஊழல் இல்லை? ஜோகூர்பாரு EDL -என்ன நிலையில் இருக்கிறது என்று பார்த்தால் புரியும்– அத்தனை பில்லியனில் எத்தனை பில்லியன் ஈன ஜென்மங்கள் பையில் அடைக்கலம் அடைந்ததோ ? இந்தியாவை கடை பிடிக்கிறது போல் தெரிகிறது.