சிறார் ஒருதலைப்பட்ச மத மாற்ற சட்டத் திருத்தத்தை மாற்றுவதற்கு மசீச பெர்லிஸ் எம்பின் ஆதரவை நாட வேண்டும், குலா

 

PerlisMBபெர்லிஸ் மாநில அரசு இயற்றியுள்ள சிறார் ஒருதலைப்பட்ச மத மாற்ற சட்டத் திருத்தத்தை மாற்றுவதற்கு மசீச அம்மாநில மந்திரி புசாரின் ஆதரவை நாட வேண்டும் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கூறுகிறார்.

இச்சட்டத் திருத்தம் பெர்லிஸ் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது அதை எதிர்த்து விவாதிக்காமலும் வாக்களிக்காமலும் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்த தித்தி சட்டமன்ற உறுப்பினர் கா ஹோக் கோங்கை தற்காத்து பேசிய மசீச மத்திய செயற்குழு உறுப்பினருக்கு மறுமொழியாக குலா இவ்வாறு கூறினார்.

மசீச இழைத்துள்ள பாவத்திலிருந்து கடைக்தேற வேண்டுமானால் அது பெர்லிஸ் சட்டமன்றத்தை மீண்டும் கூட்டி நிறைவேற்றப்பட்ட அச்சட்டத் திருத்தத்தை ரத்து செய்வதற்கு அம்மாநில மந்திரி புசாரின் ஆதரவைப் பெற வேண்டும் என்றாரவர்.

அதற்குக் குறைந்த எந்தத் தீர்வையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் மேலும் கூறினார்.

டிசம்பர் 8 இல், பெர்லிஸ் சட்டமன்றம் மாநில அரசு இஸ்லாமிய பரிபாலன சட்டம் 2006 க்கு முன்மொழிந்த சிறாரின் மத மாற்றத்திற்கு பெற்றோர்களில் ஒருவரின் ஒப்புதலை அனுமதிக்கும் சட்டத் திருத்தத்தை ஏற்றுக்கொண்டது.