ரிங்கிட் சரிவுக்கு ஏதோதோ காரணம் கூறுவதை நிறுத்துக: எம்பி சாடல்

mpரிங்கிட்டின்  மதிப்பு   சரிந்து  வரும்  வேளையில்   அது   குறித்து ‘கவலை   வேண்டாம்’    என்று   கூறுவதை    அரசாங்கம்  நிறுத்த   வேண்டும்   என  டிஏபி   எம்பி  டோனி  புவா   கூறினார்.

ரிங்கிட்  தொடர்ந்து    மூன்றாவது   ஆண்டாக   ஆசியாவின்  மிக  மோசமான    அடைவுநிலையைக்  கொண்ட   நாணயமாக  விளங்குவதை     புவா   இரண்டாம்  நிதி  அமைச்சர்    ஜோஹாரி   அப்துல்   கனிக்குச்   சுட்டிக்காட்டினார்.

ஒரு முறை   என்றால்   விபத்து   என்று   சொல்லலாம்.  இரண்டு  முறை  என்றால்   தற்செயலானது    என்று   எடுத்துக்கொள்ளலாம்.   ஆனால்   மூன்று  முறை   என்றால்   இதுதான்   அதன்   போக்கு   என்று   அர்த்தமாகும்  என்றாரவர்.

“இரண்டாம்   நிதி  அமைச்சரின்   பேச்சு   புலி  வருது  புலி  வருது   என்று   அடிக்கடிக்    கூவினானே   ஒரு   சிறுவன்  அவனைத்தான்   நினைவுப்படுத்துகிறது.

“நேரிய   சிந்தனையுள்ள   மலேசியர்   எவரும்   அவர்  சொல்வதை   நம்பமாட்டார்கள்”,  என  புவா  இன்று  ஓர்   அறிக்கையில்  கூறினார்,

“இன்னும்  சொல்லப்போனால்,  ‘கலவரம்  கொள்ளத்   தேவையில்லை’  என்று   அவர்  கூறுவது   எதிர்மறையான   தாக்கத்தைத்தான்    ஏற்படுத்தும்.  அது   அரசாங்கம்     ரிங்கிட்டின்   மதிப்புச்   சரிவதைத்   தடுத்து  நிறுத்தும்   வழிவகை   தெரியாமல்  தவிப்பதைத்தான்   காண்பிக்கிறது”,  என்றாரவர்.

ரிங்கிட்  தொடர்ந்து   சரிவு   கண்டு  வருவதற்குக்  காரணம்    கச்சா   எண்ணெய்   விலை  அல்ல     என்று  கூறிய  புவா,       மலேசியாமீது  உலகின்    நம்பிக்கை  குறைந்ததற்கு    ஊழல்தான்   காரணம்   என்றார்.

அதனால்தான்   இவ்வாண்டு   எண்ணெய்  விலை  உயர்ந்திருந்தாலும்   ரிங்கிட்   தொடர்ந்து  சரிவு  கண்டு  வருகிறது.