துணிச்சலாக பேசும் கவுன்சிலர் லிம் மா ஹூய் பணி விலகல்

councillorபினாங்கு   நகராட்சி  மன்றத்தில்   எட்டாண்டுகள்  கவுன்சிலராக   இருந்து   துணிச்சலுடன்   கருத்துச்  சொல்லி   வந்த   லிம்  மா   ஹூய்   பதவி  விலகிக்   கொண்டிருக்கிறார்.

14  என்ஜிஓ-களின்   கூட்டணியான   பினாங்கு   அரங்கத்தின்    துடிப்புமிக்க   உறுப்பினரான   லிம்,   நேற்று   நகராட்சி   மன்றக்  கூட்டத்தில்    பணிவிலகும்   முடிவைத்    தெரிவித்தார்.

மீண்டும்  கவுன்சிலராக   நியமனம்   செய்யப்படுவதை   விரும்பவில்லை     என்றும்   அதைத்        தாம்  சார்ந்துள்ள   சமூக   அமைப்பிடம்    தெரிவித்து   விட்டதாகவும்   அவர்  சொன்னார்.

மாநில   அரசின்   கொள்கைகளைப்  பல    தடவை   குறை  கூறி  வந்துள்ள   லிம்,  பினாங்கு    மக்களுக்குச்  சேவையாற்ற   தமக்கு  வாய்ப்பளித்த    அதிகாரிகளுக்கு    நன்றி   தெரிவித்தார்.

கடலிலிருந்து  நிலத்தை    அகப்படுத்தும்   திட்டத்தைக்  குறை  கூறி  வந்தவர்  லிம்.      ஜார்ஜ்  டவுனின்      உலகப்  பாரம்பரியச்  சொத்து  என்ற   அங்கீகாரம்  அபாயத்துக்குள்ளாகி  இருப்பதாக   அடிக்கடி   அவர்     எடுத்துரைத்து வந்திருக்கிறார்.   மாநில   அரசின்  ரிம27 பில்லியன்   பினாங்கு   போக்குவரத்து    பெருந்   திட்டம்    தீவின்   சுற்றுச்சூழலுக்குக்   கேடு  விளைவிக்கும்    என்றும்   அவர்   எச்சரித்து   வந்தார்.

இப்படி   அடிக்கடி   அரசின்   கொள்கைகளைக்   குறை  சொல்லி  வந்த   அவரை    ஒரு  “பொய்யர்”   என்று   முதலமைச்சர்  லிம்  குவான்   எங்  சாடியதும்    உண்டு.  ஒன்றல்ல,  இரண்டல்ல,  எட்டு  தடவை   அப்படித்    திட்டியுள்ளார்

மாநில   அரசுடன்   அடிக்கடி   முட்டி  மோதிக்   கொண்டாலும்   மாநகராட்சி  மன்றத்தின்    முயற்சியில்    “பல  முக்கியமான   முன்னேற்றங்கள்”   ஏற்பட்டிருப்பதையும்   லிம்   பாராட்டினார்.

எளிய  மனிதராக    வாழ்ந்து    வருபவர்   லிம்.     சொல்வதைத்தான்   செய்வார்.   அவர்   நகராட்சி  மன்றக்  கூட்டங்களுக்குச்  செல்வதாக   இருந்தாலும்    கவுன்சிலின்   பணிகள்   நிமித்தம்  செல்வதாக   இருந்தாலும்  சைக்கிளைத்தான்   பயன்படுத்துவார்.