எதிரணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று இப்போது அறிவிக்க வேண்டியதில்லை என்ற முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட்டின் கருத்துடன் தாம் உடன்படுவதாக அமனா தலைமைச் செயலாளர் அனுவார் தாஹிர் கூறினார்.
“மகாதிர் கூறுவதை ஒப்புக்கொள்கிறோம். அவரது கருத்து சரியானதே . அமனா அவரை ஆதரிக்கிறது”, என்றவர் இன்று கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
பிரதமர் வேட்பாளர் எங்கே, நிழல் அமைச்சரவை எங்கே என்றெல்லாம் அம்னோ/ பிஎன் தலைவர்கள் கேட்கலாம், ஆனால், பக்கத்தான் ஹராபான் “மற்றவர் பாட்டுக்கெல்லாம் தாளம் போடாது” என்று அனுவார் கூறினார்.
“அது (பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது) முன்னுரிமை கொடுக்க வேண்டிய விவகாரமல்ல”, என்றாரவர்.
பக்கத்தான் ஹராபானும் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவும் ஒரு நல்ல கூட்டணி என்ற நம்பிக்கையை மக்கள் மனத்திலே உருவாக்க வேண்டும், அதுதான் முக்கியம், அதற்குத்தான் முன்னுரிமை என்று அவர் வலியுறுத்தினார்.
மகாதிர் நேற்றிரவு, “நாம் இப்போது பிரதமர் பெயரைக் குறிப்பிட்டால் வேறு சிலர் அதனால் ஏமாற்றமடைவார்கள்; நமக்குள்ளே சச்சரவுகள் ஏற்படும்” என்றார்.
அதனால், எதிரணியின் பிரதமர் தேர்வு பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் செய்யப்பட வேண்டும் என்றும் பிரதமர் ஒரு கட்சியால் மட்டுமல்லாமல் அனைத்து எதிர்க்கட்சிகளாலும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் சொன்னார்
அவர் பழம்பெரும் அரசியல்வாதி…அரசியல் சாணக்கியம் தெரிந்தவர்…ஆனால் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் வேதாளம் மறுபடியும் முறுங்க மரம் ஏறிவிடுமோ என்று அச்சமாகவும் இருக்கிறது..