போலீஸ் புகார்: சீனப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் “காணாமல் போய் விட்டது”

 

missing csallocationsதேசிய பட்ஜெட் 2016 இல் சீனப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் சம்பந்தமாக வெளியான முரண்பாடான அறிக்கைகள் பற்றி டிஎபி அரசியல் உதவியாளர் ஒரு போலீஸ் புகார் செய்துள்ளார்.

காணாமல் போய் விட்டதாக சோங் கூறும் ரிம50 மில்லியன் மோசடி செய்யப்பட்டதா அல்லது அதில் அதிகாரத் துஷ்பிரயோகம் நடந்துள்ளதா என்பதை போலீசார் விசாரிக்க வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பேராக் டிஎபி தலைவர் இஙா கோர் மிங்கின் உதவியாளரான சோங் அவரது ஊடக அறிக்கையில் ஒதுக்கப்பட்ட முழு மானியத்தையும் கல்வி அமைச்சிடம் ஒப்படைத்து விட்டதாக நிதி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதாக கூறும் சைனா பிரஸ் செய்தியை மேற்கோள் காட்டியுள்ளார்.

“ஆனால், கல்வி அமைச்சு முழு ரிம50 மில்லியன் மானியத்தையும் பெற்றதாக கூறப்படுவதை மறுத்துள்ளது”, என்று சோங் கூறினார்.

ஈப்போ மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்த சோங், 2016 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் 8 நாட்கள்தான் இருக்கின்றன. ஆனால், நாடு முழுவதிலுமுள்ள சீனப்பளிகள் அந்த நிதி ஒதுக்கீட்டிலிருந்து இன்னும் ஒரு காசைக் கூட பெறவில்லை என்று சோங் மேலும் கூறினார்.

2013 மற்றும் 2014  ஆண்டுகளில்  இது போன்ற புகார்கள் ஏதும் இல்லை. வாக்களிக்கப்பட்ட ரிம50 மில்லியன் சீன தொடக்கப்பள்ளிகளுக்கு முழுமையாக அளிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

மேலும், எஸ்எம்ஜேகே (SMJK) பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரிம25 மில்லியனும் கத்தோலிக்க பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரிம50 மில்லியனும் காணாமல் போய் விட்டன. அவற்றையும் போலீசார் விசாரிக்க வேண்டும் என்று சோங் வலியுறுத்தினார்.

கடந்த செவ்வாய்கிழமை, கல்வி அமைச்சர் மாட்ஸிர் காலிட் பட்ஜெட் வெட்டுகளால் சீனப்பள்ளிகளின் பராமரிப்புக்காவும் மேம்பாட்டுக்காகவும் ஒதுக்கப்பட்ட மானியத்தை இவ்வாண்டில் அப்பள்ளிகள் பெற முடியாமல் போய் விட்டது என்று கூறியதாக சைனா பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

அது தீர்க்கப்படாவிட்டால், இப்போதைக்கு கிடைக்கக்கூடியதை எடுத்துகொள்ள வேண்டும் என்று கல்வி அமைச்சரை மேற்கோள் காட்டி சைனா பிரஸ் அதன் செய்தியில் கூறியிருந்தது.

ஆனால், நிதி அமைச்சர் II ஜோஹாரி அப்துல் கனி ஒதுக்கப்பட்ட மானியம் முழுவதையும் கல்வி அமைச்சுக்கு அனுப்பிவிட்டதாக சின் சியு டெய்லியிடம் நேற்று கூறியிருக்கிறார்.

“பிரதமர் பட்ஜெட்டை தாக்கல் செய்த போது வெளியிட்ட அறிவிப்புகளை அமைச்சுகள் பின்பற்றியாக வேண்டும். அரசாங்கம் சீனப்பள்ளிகளுக்கு ரிம50 மில்லியன் ஒதுக்குவதற்கு வாக்குறுதி அளித்திருந்தது. ஆகவே, கல்வி அமைச்சு அத்தொகையை ஒதுக்க வேண்டும். அவ்வளவுதான்.”, என்று சோங் கூறினார்.

இன்னொரு செய்தி அறிக்கையில், இந்த நிதி ஒதுக்கீடு சம்பந்தமான பிரச்சனை குறித்து தெரிந்துகொள்ள கல்வி அமைச்சர் மாட்ஸிருடன் தொடர்பு கொள்ளுமாறு இரண்டாவது நிதி அமைச்சர் ஜொஹாரி செய்தியாளர்களிடம் கூறிவிட்டு நழுவி விட்டார்.

எனினும், ஒரு முகநூல் பதிவில் துணைக் கல்வி அமைச்சரும் மசீச இளைஞர் தலைவருமான சோங் சின் வூன் சீனப்பள்ளிகளுக்கு ரிம50 மில்லியன் ஒதுக்கப்படும் என்று பிரதமர் திட்டவட்டமாகக் கூறவில்லை என்று கூறியுள்ளார்.