சீனப்பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு “பற்றாக்குறை”: மசீச துணை அமைச்சரை அம்னோ எம்பி சாடினார்

 

Chinese school funding umno slamsசீனப்பள்ளிகளுக்கு மத்திய அரசு அளித்த முழு மானியமும் சீனப்பள்ளிகளுக்குக் கொடுக்கப்படவில்லை என்று கூறிய துணைக் கல்வி அமைச்சரும் மசீச இளைஞர் பிரிவு தலைவருமான சோங் சின் வூனை அம்னோ செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினர் அனுவார் அப்துல் மனாப் சாடினார்.

முன்னதாக, மசீச ஆட்சேபம் தெரிவித்த பின்னர் சீனப்பள்ளிகள் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளைப் பெறவில்லை என்று சோங் கூறியதைத் தொடர்ந்து அனுவார் அவரைச் சாடினார்.

சீனப்பள்ளிகளுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட ரிம50 மில்லியன் நிதி ஒதுக்கீட்டிற்கு குறைவாக “பகுதிப் பணம்” கொடுக்கப்பட்டதை மசீச நிராகரித்து விட்டதாக சோங் விளக்கமளித்திருந்தார். ஆனால், அப்பற்றாக்குறை எவ்வளவு என்று அவர் கூறவில்லை .

“சீனப்பள்ளிகள் (முழு) ரிம50 மில்லியனைப் பெற வேண்டும் என்று மசீச வலியுறுத்துகிறது.

“ஆகஸ்ட் மாதத்தில் அப்பணம் (சீன தொடக்கப்பள்ளிகளுக்கான) கல்வி அமைச்சிலிருந்து வந்தது. ஆனால் அது முழுத் தொகை அல்ல. பகுதிப் பணம் பட்டுவாடாவை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”, என்று சோங் அவரது முகநூலில் கூறியுள்ளார்.

ஆனால், சோங்-இன் நிலைப்பாட்டை அனுவார் “திமிரானது” என்று வர்ணித்தார்.

கல்வி அமைச்சு சீனப்பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படவில்லை என்று தெளிவாகக் கூறியுள்ளதுடன், அது மொத்தமாக ஒரே தொகையாக கொடுக்கப்படவில்லை என்று மட்டுமே கூறியது என்றார் அனுவார்.

“மசீச இளைஞர் தலைவர் மற்றும் துணைக் கல்வி அமைச்சர் என்ற முறையில் தவறான புரிந்துணர்வுகளை, குறிப்பாக சீன சமுகத்தினர்களுக்கிடையில், தவிர்ப்பதற்காக அவர் (சோங்) அவரது வார்த்தைகளை மிகக் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்”, என்று அனுவார் மேலும் கூறினார்.

“தமிழ்ப்பள்ளிகள் பாதிக்கப்படவில்லை”

இதனிடையே, நாடுதழுவிய அளவில் தமிழ்ப்பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் குறைப்பு ஏதும் இல்லை என்று மஇகா கூறியது.

ஜோகூர் மற்றும் பினாங் மஇகா தலைவர்கள் அவர்களது மாநிலங்களில் தமிழ் தொடக்கப்பள்ளிகளுக்கான நிதி இன்னும் வந்து கொண்டிருக்கிறது என்று கூறினர்.