ஜமால்: ‘அனாக் டாரா’வுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா?

jamalமந்திரி   புசார்    அஸ்மின்  அலியின்   தலைமையில்   சிலாங்கூர்    அரசு   ஆள்  பார்த்து    நடவடிக்கை   எடுப்பதாக    சுங்கை  புசார்   அம்னோ    தலைவர்  ஜமால்   முகம்மட்  யூனுஸ்   குற்றம்   சாட்டினார்.   செகிஞ்சானில்   அவரது   தங்குவிடுதி  ஒன்று   உரிமம்  இன்றிச்   செயல்பட்டு   வந்ததற்காக   மாநில   அரசால்  பறிமுதல்   செய்யப்பட்டதை    அடுத்து   ஜமால்   இவ்வாறு   கூறினார்.

“மந்திரி   புசாரான   அவர்    ஆள்   பார்த்து    நடந்து  கொள்ளக்கூடாது.  ‘அனாக்  டாரா(கன்னிப்  பெண்)வுக்கு   (உரிமம்)க்  கொடுக்கிறார்.  மணவிலக்கு  பெற்றவருக்குக்  கொடுப்பதில்லை .

“அவர்   பிகேஆர்   அல்லது   பக்கத்தான்   ஹராபானுக்கு   மட்டும்    மந்திரி   புசார்   அல்ல,   சிலாங்கூர்   மக்கள்   அனைவருக்கும்தான்   மந்திரி  புசார்”,  என்றாரவர்.

ஜமால்,   நாசி  லெமாக்   கடைக்காரர்  சித்தி   ஹஜ்ஜார்   அஹ்மட்    பற்றிக்  குறிப்பிடுவதாக    தெரிகிறது.  சித்தி    ஹஜ்ஜாரிடம்    விற்பனை   உரிமம்  இல்லாததால்   ஊராட்சி   அதிகாரிகளுடன்   பிரச்னை   ஏற்பட்டு    அது  ‘நாசி  லெமாக்  அனாக்   டாரா’   என்ற     தலைப்பில்   முகநூலில்   பதிவு  பெற்று   பலரின்   கவனத்தையும்   கவர்ந்தது.

அஸ்மின்   தாமே  சித்தி   ஹஜ்ஜாரின்   கடைக்குச்   சென்று  ஒரு   பாரத்தை    அவரிடம்   கொடுத்து    விற்பனை   உரிமத்துக்கு    விண்ணப்பிக்கச்   சொன்னார்.

ஜமால்,   தாமும்   சிலாங்கூர்  வாசிதான்   என்றார்.

வியாழக்கிழமை   சுங்கை   புசார்   மாவட்ட   மன்ற(எம்டிஎஸ்பி)   அதிகாரிகள்  ஜமாலின்   ஓய்வுத்தளத்துக்குச்  சென்று   அதை  உடைக்க  முற்பட்டனர்.

அவர்கள்   அதை   உடைத்தெறிவதற்குமுன்   ஜமாலின்   வழக்குரைஞர்கள்   குறுக்கிட்டுத்   தடுத்தனர்.  அவ்விவகாரத்துக்கு  நீதிமன்றத்தில்   தீர்வு   காண்போம்    என்றனர்.

நேற்று  ஜமால்,    அவரது  ஓய்வுத்தளத்துக்கு   “அதிகாரப்பூர்வமான   திறப்புவிழா”    கண்டதோடு   எம்டிஎஸ்பி   அறிவிக்கையை(நோடீஸ்)யும்   கிழித்தெறிந்தார்.

தான்    சட்டத்தை  மீறவில்லை   என்றும்   எம்டிஎஸ்பிதான்   ஓய்வுத்தளத்தைப்  பறிமுதல்   செய்ததில்   சட்டத்தைப்  பின்பற்றவில்லை      என்றும்   அவர்  சொன்னார்.

“நான்  சட்டத்தை   மதிப்பவன்.  (நான்) தவறு   செய்திருந்தால்   சட்டப்படி   நடவடிக்கை   எடுங்கள்.  நீதிமன்றத்தில்    எதிர்வாதம்   செய்ய    நான்  தயார்”,  என்றார்.