பந்துவான் ரக்யாட் 1மலேசியா(பிரிம்) உதவித் தொகை வழங்கப்படுவது ஊழல் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறுவது வியப்பளிப்பதாகக் கூறுகிறார் சாலே சைட் கெருவாக். ஏனென்றால் மகாதிர் பிரதமராக இருந்தபோது அவரும் இப்படிப்பட்ட திட்டங்களைக் கொண்டு வந்ததுண்டு என்றாரவர்.
மகாதிர் திரெங்கானுவுக்கு Wang Ehsan வழங்கியதை அவர் நினைவுக்குக் கொண்டு வந்தார்.
2,000ஆம் ஆண்டில் கூட்டரசு அரசாங்கம் எண்ணெய் உரிமப்பணத்துக்குப் பதிலாக வாங் எஹ்சான் என்ற ஒன்றை வழங்கியது. அப்பணம் பிரிம் உதவித் தொகையைப் போலவே மக்களுக்கு உதவியளிக்கப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.
திரெங்கானு 1999-இலிருந்து 2004வரை பாஸின் ஆட்சியில் இருந்தது.
“2000-இல் வாங் எஹ்சான், திரெங்கானு உதவித் திட்டம் ஆகியவற்றை வழங்கியவர் இப்போது பிரிமைக் கண்டனம் செய்கிறார்.
“அப்படியானால், எதிரணி ஆட்சிக்கு வந்தால் எல்லா உதவிகளும் மக்கள்நலத் திட்டங்களும் அடியோடு ஒழிக்கப்படும் என்கிறாரா மகாதிர். மகாதிர் இதைத் தெளிவுபடுத்த வேண்டும்”, என சாலே ஓர் அறிக்கையில் கூறினார்.