சரவாக் டிஏபியும் பிகேரும் தொகுதிகள் சிலவற்றைப் பரிமாறிக்கொள்ளலாம் என போர்னியோ போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
“நேற்று (மாநில டிஏபி தலைவர்) சொங் சியான் ஜென் என் வீட்டுத் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொண்டார். இருவரும் ஜனவரி நடுப்பகுதியில் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டோம். அனேகமாக இது பற்றிப் பேசலாம்”, என மாநில பிகேஆர் தலைவர் பாரு பியான் அந்த ஆங்கிலமொழி நாளேட்டிடம் தெரிவித்தார்.
மேல்விவரங்களை அவர் கூறவில்லை ஆனாலும் தொகுதிகள் பரிமாற்றம் குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளதை அவர் உறுதிப்படுத்தினார்.
“மீரியில் மட்டுமல்லாது மற்ற தொகுதிகளைப் பரிமாறிக்கொள்வது குறித்தும் விவாதிப்போம்”, என்று பாரு கூறியதாக போர்னியோ போஸ்ட் தெரிவித்தது.
பிகேஆர் மீரியை டிஏபிக்குக் கொடுத்து பதிலுக்கு டிஏபியின் தொகுதியான ஸ்டேம்பினைப் பெற்றுக்கொள்ளும் என சீன மொழி நாளேட்டில் வெளிவந்திருந்த செய்தி குறித்துக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.