செராஸ், லோரோங் ஈக்கான் மாஸில் உள்ள ஒரு வீட்டில் உள்ளவர்களுக்குக் கடன் முதலைகளால் தீராத தொல்லை. அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆ லோங்குகள் எனப்படும் கடன் முதலைகளிடம் நிறைய கடன் பெற்றிருப்பதுதான் அதற்குக் காரணம்.
சம்பந்தப்பட்ட நபர் பல கடன் முதலைகளிடம் சுமார் ரிம300,000 கடன் பட்டிருக்கிறார். கடன் வசூலிப்பாளர்கள் அந்த வீட்டுக்கு வந்து தீ இட்டதாகவும் சாயத்தை வீட்டு வாசலில் வீசி அடித்துச் சென்றதாகவும் வாய்வழி மிரட்டியதாகவும் கடன் வாங்கியவரின் சகோதரர் ஈ தியான் ஹெள கூறினார்.
ஆகக் கடைசியாக டிசம்பர் 10-இல் தங்கள் வீட்டுக்குத் தீ வைத்துச் சென்றார்கள் என்றும் அதில் ஒரு மோட்டார் சைக்கிள், வீட்டின் வேலி, கூரைப்பகுதி, மின் கம்பிகள் ஆகியவை எரிந்து போனதாக அவர் சொன்னார்.
ஆ லோங்குகளுக்குக் கடன் கொடுக்க வேண்டிய தன் சகோதரர் இப்போது அந்த விட்டில் இல்லை என்றாரவர். அவரை அக்குடும்பத்தார் வீட்டை விட்டு விரட்டி எட்டு மாதங்களாகின்றன.
“முதல் முறை எங்கள் வீடு வந்த ஆலோங் சாயத்தை வீசி அடித்தபோதே அவரை வீட்டிலிருந்து போகச் சொல்லி விட்டோம்”, என்று தியான் ஹெள கூறினார்.
முன்பு அவர் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கக் குடும்பத்தாரும் உதவினர்.
“மூன்றாண்டுகளுக்குமுன் அவர் ரிம60,000- இலிருந்து ரிம70,000வரை கடன் வாங்கியிருந்தார்.
“நாங்கள் ரிம35,000 கொடுத்து அக்கடனைத் திருப்பிச் செலுத்த உதவினோம். ஆனால், இனியும் உதவ முடியாது”, என்றாரவர்.
கடன் முதலைகள் கொடுக்கும் தொல்லை குறித்து பல முறை போலீஸில் புகார் செய்து விட்டார்கள். போலீஸ் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.
“என்ன நடந்தது என்று விசாரித்தார்கள், படமெடுத்தார்கள் அவ்வளவுதான்”, என தியான் ஹெள கூறினார்.