ஜனநாயகத்தில் ஏகப்பட்ட குறைகள் : வருத்தப்படுகிறார் மகாதிர்

dr mபிரதமர்   நஜிப்   அப்துல்    ரசாக்கைப்  பதவி  இறக்குவதற்கான   எல்லா   வழிகளும்   அடைபட்டுக்  கிடப்பதாக   அடிக்கடி  குறைபட்டுக்கொள்ளும்    முன்னாள்    பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்,  இப்போது  ஜனநாயகமே  உள்ளார்ந்த   குறைகளைக்    கொண்டிருப்பதாக    அங்கலாய்க்கிறார்.

மக்கள்   நல்ல    தலைவர்களைத்   தேர்ந்தெடுப்பார்கள்    என்ற   நம்பிக்கையின்   அடிப்படையில்   அமைந்ததுதான்   ஜனநாயகம்    என்றாரவர்.

“ஆனால்,  பலர்   இப்போது   ஜனநாயகத்தை    எண்ணி   வருத்தப்படுகிறார்கள்.

“ஜனநாயக  முறை   தவறாகப்  பயன்படுத்தப்படக்  கூடிய   சாத்தியங்கள்   இருப்பதை   ஆய்வுகள்   காண்பிக்கின்றன. தவறான   ஆள்கள்   தேர்ந்தெடுக்கப்படலாம்.  அவர்கள்   தங்களுக்கு   அளிக்கப்பட்ட     அதிகாரத்தைத்   தவறாகப்   பயன்படுத்துவதோடு  பல    ஆண்டுகள்  பதவியிலேயே   ஒட்டிக்   கொண்டும்   இருப்பார்கள்.

“அப்பட்டப்பட்டவர்களே    சர்வாதிகாரிகளாகவும்    மாறுவார்கள்”,  என்று   22  ஆண்டுக்   காலம்   பிரதமராக   இருந்த   மகாதிர்   தம்   வலைப்பதிவில்   கூறினார்.

மேலை   நாடுகளில்   ஜனநாயகம்   வெற்றிகரமாக    செயல்படுகிறது.  காரணம்   அந்நாட்டு   மக்களின்   கலாச்சாரம்.  ஆனால்,  புதிதாக   ஜனநாயகத்தைப்   பின்பற்றும்   நாடுகளில்   அப்படி  இல்லை.

“அவர்கள் (மேலை  நாட்டினர்)  முதிர்ச்சி   பெற்றவர்கள்,  அனுபவம்   வாய்ந்தவர்கள்.  தவறான   ஆள்களைத்    தேர்ந்தெடுத்தால்   அதன்   விளைவைத்   தாங்களும்   தங்கள்   நாடுகளும்தான்   அனுபவிக்க   நேரும்   என்பதை   உணர்ந்தவர்கள்.

“இங்கிருப்பது போல்    அந்நாடுகளில்   ஊழலும்   பரவலாக   இல்லை.   நாடாளுமன்றம்,  நிர்வாகம்,  நீதித்துறை   ஆகியவற்றுக்கிடையே   அதிகாரப்  பகிர்வும்   மதிக்கப்படுகிறது,     கடைப்பிடிக்கப்படுகிறது.

“அதில்  தப்பு    செய்தவர்கள்   தப்பித்துக்  கொள்ள   முடியாது.

“ஆனால்,  இளம்   ஜனநாயக   நாடுகளில்   ஜனநாயகத்தின்   அடிப்படைக்  கூறுகள்  மதிக்கப்படுவதில்லை”,  என்றாரவர்.

தொகுதி   எல்லைகளை   மாற்றி   அமைத்தல்,  வாக்காளர்களைக்  கூண்டோடு  இடமாற்றல்,  தேர்தல்களில்   மோசடி   செய்தல்    என   ஜனநாயகம்    பல   வழிகளில்      தவறாகப்  பயன்படுத்தப்படலாம்     என  மகாதிர்  குறிப்பிட்டார்.

“அத்துடன்  பணம்  அல்லது  பொருள்களைக்  கொடுத்து   வாக்காளர்களை  விலைக்கு   வாங்கலாம்”.

இத்தனை   கோளாறுகள்    இருந்தாலும்    ஜனநாயகம்தான்     ஒரு  “நல்ல   ஆட்சிமுறை”  என்றவர்   சொன்னார்.

ஆனால், “மக்கள்  தங்கள்   உரிமைகளை    நிலைநாட்டாவிட்டால்   ஜனநாயகம்    கயவர்களின்   ஆட்சியாக   மாறிவிடும்”, என்றவர்   எச்சரித்தார்.