சிரியாவில் இன்று நள்ளிரவிலிருந்து போர் நிறுத்தம், ரஷ்யா அறிவிப்பு

 

Russiaஇன்று வியாழக்கிழமை நள்ளிரவிலிருந்து(சிரியா நேரப்படி) சிரியாவுக்கும் அந்நாட்டின் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தப்படி நாடுதழுவிய அளவிலான போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது. இந்த ஒப்பந்தத்திற்கு ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் உத்தரவாதம் அளிக்கின்றன. இதனை ரஷ்ய அதிபர் விலாடிமிர் புட்டின் அறிவித்தார்.

சிரியா அரசாங்கமும் துருக்கியின் வெளிவிவகார அமைச்சும் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தின.

இந்த ஒப்பந்தம் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள், முன்னாள் அல்கெய்டாவுடன் தொடர்புள்ள ஃபாத்தா முன்னனியும் அதன் இணை உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கவில்லை என்று சிரியா இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகிறது.

இந்தப் போர் நிறுத்தத்தில் 60,000 கிளர்ச்சிக்காரர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று ரஷ்ய தற்காப்பு அமைச்சர் கூறினார்.

ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இந்த “வலுவற்ற” போர் நிறுத்த ஒப்பந்தம் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கு உதவி செய்யும் என்று ரஷ்ய அதிபர் கூறினார்.