கிணற்றுத் தவளையாக இருக்காதீர், எதிரணியைச் சாடினார் நஜிப்

 

PMattacksoppositionதாம் பதவி ஏற்றகாலத்திலிருந்து இன்று வரையில் ஆற்றியுள்ள பங்களிப்புகளை அலட்சியப்படுத்தி விட்டு தமது ஆட்சியில் நாட்டின் மேம்பாட்டிற்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறிவரும் எதிரணியினரை பிரதமர் நஜிப் கிணற்றுத் தவளைகள் என்று சாடினார்.

அவர்களின் விவாதங்கள் எல்லாம் வெறும் பொருள்ளற்ற வார்த்தைகள் மட்டுமே. அவர்கள் எதையும் காணாதது போல் நடிக்கின்றனர் என்று கூறிய நஜிப், தமது ஆட்சியில் நாடு கணிசமான கட்டமைப்பு மேம்பாடுகளைக் கண்டுள்ளது. அதன் விளைவாக நாட்டின் பொருளாதாரம் புத்துயிர் பெற்றுள்ளது என்றார்.

தமது நிருவாகம் மேற்கொண்ட மேம்பாட்டுத் திட்டங்களால் – எம்ஆர்டி, கிழக்குக் கரை நெடுஞ்சாலை 3, பான் போர்னியோ நெடுஞ்சாலை, எல்ஆர்டி 2 மற்றும் 3 மற்றும் சுல்தான் அப்துல் ஹலிம் மு’அட்ஸாம் ஷா பாலம் – பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்று நஜிப் மேலும் கூறினார்.

மேலும், இஸ்கண்டார் டிஸ்டிரிக், ரேப்பிட் பெங்கெராங், டாஙா வாட்டர்ஃப்ரண்ட், துன் ரசான் இக்சேன்ஜ், பண்டார் மலேசியா மற்றும் கேஎல்118 போன்ற பெரும் திட்டங்களைச் சுட்டிக்காட்டிய பிரதமர் அவை பொருளாதார நன்மைகளைக் கொணருவதோடு தேசியச் சின்னங்களாக மாறும் என்றார்.

இந்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் மலேசியா மேம்பாட்டு திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. லண்டன் பேட்டர்சீ மேம்பாட்டு திட்டம் லண்டனின் பெருமைக்குரிய கட்டடத்திற்கு புத்துயிர் அளிக்கிறது என்றார்.

வலைதளத்திற்குச் சென்று மலேசியாவை புகழ்பெற்ற நாடாக்கும் திட்டங்களை நீங்களே பாருங்கள் என்று நஜிப் கூறினார்.