மகாதிர்: நான் ஏன் பிரிம் இலஞ்சம் என்று வலியுறுத்துகிறேன்

 

Brimisbriberyபிரிம் ஒரு வகையான இலஞ்சம் என்று நான் கண்டனம் தெரிவித்திருப்பது சிலருக்கு குழப்பத்தையும் சினத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

நான் இன்னும் அதை ஒரு வகையான இலஞ்சம் என்று வற்புறுத்துகிறேன். இதைப் பெற்றுக்கொண்ட ஒரு கம்பத்து நபர் கூறிய கருத்து இதைத் தெளிவாக்குகிறது.

அவர் கூறினார்: “நான் நஜிப்பை ஆதரிப்பேன் ஏனென்றால் அவர் எனக்கு பணம் கொடுத்தார். மகாதிர் எனக்கு பணம் கொடுக்கவில்லை.”

பிரிம் அரசாங்கப் பணத்திலிருந்து கொடுக்கப்படுகிறது. அதன் வெளிப்படையான நோக்கம் 13 ஆவது பொதுத் தேர்தலில் மக்களை அரசாங்கக் கட்சிக்கு வாக்களிக்க வைப்பதாகும் ஏனென்றால் அத்தேர்தலுக்கான பிஎன் கொள்கை விளக்க அறிவிப்பு அரசாங்கக் கட்சி வெற்றி பெற்றால் இன்னும் பெரிய பிரிம் கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கிறது.

ஐயத்திற்கிடமின்றி அது வாக்காளர்களின் வாக்குகளை வாங்குவது பற்றியதாகும்.

தேர்தலில் வாக்குகளுக்குப் பணம் கொடுக்கும் நோக்கம் இல்லை என்றால், அதை பின் கொள்கை விளக்க அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கக்கூடாது.

எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டின் அரசாங்கம் எதுவாக இருந்தாலும் அதற்கு ஏழைகளைக் கவனித்துக்கொள்ளும் கடப்பாடு உண்டு.

உதவிச் சம்பளம் வேலையில்லாதவர்களின் சிரமத்தைக் குறைப்பதற்காக கொடுக்கப்படுகிறது. ஏழைகளுக்கு நிதி உதவி கொடுக்கப்படுகிறது, ஆனால் அது அவர்களின் வருமானத்தை நிறைவு செய்வதற்காக அல்ல.

மாதத்திற்கு ரிம3,000 க்கும் குறைவான வருமானம் பெறும் ஏழு மில்லியன் மக்களுக்கு பிரிம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

அப்படி என்றால், ஆண்டொன்றுக்கு, ரிம36,000 வருமானம் பெறும் ஒருவரும்கூட ஆண்டுக்கு ரிம500 பெறுவார். அவ்வாறான மக்களுக்கு இது அர்த்தமுள்ள நிவாரணம் அல்ல.

ஆனால், வருமானம் இல்லாதவர்கள் அல்லது மாதம் ரிம500க்கும் அல்லது ரிம6,000க்கும் குறைவான வருமானம் பெறுபவர்கள் ஆண்டுக்கு கூடுதலாக ரிம500 கிடைப்பதை வரவேற்பார்கள். அது ஒன்றும் அதிகமானதல்ல என்றாலும் அதைக் கொண்டு சில உணவுப் பொருட்களை வாங்கலாம்.

இப்போது அந்தத் தொகை ஆண்டொன்றுக்கு ரிம1,200 அல்லது மாதமொன்றுக்கு ரிம100 ஆக உயர்த்தப்படவிருக்கிறது. அதுவும்கூட அதிகமான ஒன்றல்ல என்றாலும், பரவாயில்லை. ஆனால், மாதம் ஒன்றுக்கு ரிம3,000 சம்பாதிப்பவருக்கு அது மிகச் சிறிய தொகைதான்.

இந்தப் பணம் அம்னோ வாயிலாக பட்டுவாடா செய்யப்படும். ஐயத்திற்கிடமின்றி இது அம்னோவுக்கு மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியாகும்.

அது அரசியல். இது இலஞ்சம், குறிப்பாக தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் பட்டுவாடா செய்தால். கொடுக்கப்படும் தொகை அதிகரிக்கப்பட்டு. கட்சியின் கொள்கை விளக்க அறிவிப்பில் சேர்க்கப்பட்டிருந்தால், இதுவும் இலஞ்சம்தான்.

“பிரிம் இல்லாமல் நாம் செழிப்போடு இருந்தோம்”

இந்தப் பணத்தை அரசாங்க அதிகாரிகள் அல்லது கட்சிபேதமின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக பட்டுவாடா செய்யப்பட்டால் அது இலஞ்சம் ஆகாது.

ஆனால் ஜிஎஸ்டி வரி மற்றும் பல நிதி உதவிகள் நிறுத்தப்பட்டதால் இந்த ஆதரவு பயனற்றதாகி விட்டது.

வாழ்க்கைச் செலவினம் பிரிம் தொகையைவிட கூடிவிட்டது. உண்மையில், பெரும்பாலானவர்களின் வருமானத்திலிருந்து பிரிம் ஈடுசெய்வதற்கு மேலான தொகையை ஜிஎஸ்டி எடுத்துக்கொள்கிறது.

வாங்கும் சக்தி அடிப்படையில் பார்த்தால். இப்போது ரிங்கிட்டின் மதிப்பு ஒரு ரிங்கிட்டுக்கு மேலாக குறைந்துள்ளது.

ஆக, இப்போது மாதமொன்றுக்கு ரிம500 வருமானம் பெறும் ஒருவர் ரிம355 விலைமதிப்புள்ள வாங்கும் சக்தியைப் பெறுகிறார்.

ரிங்கிட்டின் மதிப்பு குறைக்கப்பட்டதாலும் வாழ்க்கைச் செலவினம் கூடியதாலும் பிரிமின் மதிப்பு அதன் தொகையை விட மிகக் குறைவானதாகும், அது ரிம1,200 க்கு கூட்டப்பட்டாலும் அதே நிலைதான்.

மிகுந்த ஏழ்மையில் இருப்பவர்கள் மட்டுமே பிரிம்மை வரவேற்பார்கள்.

இந்த மக்களுக்குத்தான் நாம் உதவ வேண்டியுள்ளது, ஆனால் ஆண்டொன்றிற்கு ரிம1,200க்கு மேலாக கொடுக்க வேண்டும்.

சமீபத்தில் பிரிம் உதவிக்கு தகுதிபெற்றவர்கள் எதிர்க்கட்சிகளின் பேரணிகளில் கலந்துகொண்டால் அவர்கள் பிரிம் பெற உரிமை இல்லை என்று மிரட்டப்பட்டுள்ளனர்.

இது பிரிம் மக்களுக்கு இலஞ்சமாக கொடுக்கப்படுகிறது என்று பொருள் படாவிட்டால், இலஞ்சஊழல் என்பதின் அர்த்தம் என்று எனக்குத் தெரியவில்லை.

பிரிம் மக்களை அரசாங்க ஆதரவை எதிர்பார்த்து வாழ்பவர்களாக்கும் தன்மை கொண்டிருக்கிறது. கொடுக்கப்பட வேண்டிய பணம் இலக்கைச் சென்றடையவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இன்று, பிரிட்டனில் வேலையில்லாமல் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வேலை செய்தால்தான் உதவித் தொகை பெற முடியும்.

நமக்கு மலேசியாவில் தேவைப்படுவது ஏழைகள் சிறந்த வருமானம் பெற அதிகமான வேலை வாய்ப்புகள் இருக்க வேண்டும். இதற்கு நாம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இல்லாமல் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

வேலை செய்ய இயலாத நிலையில் இருப்பவர்களுக்கு கணிசமான நிதி உதவி அளிக்கப்பட வேண்டும்.

அதற்கப்பால், அரசாங்கம் நாணயத்தை மறுமதிப்பீடு செய்வது மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

பிரிம் கொடுக்கப்படுவதற்கு முன்பு மக்கள் நிச்சயமாக நல்ல நிலையில் இருந்தனர்.

பிரிம் ஒரு வகையான இலஞ்சம் மட்டுமல்ல; அது மக்களின் மனதையும் சீரழித்து விடுகிறது.

உண்மையாக ஏழ்மையில் இருக்கும் மக்களை அடையாளம் காண்பதற்காக அரசாங்கம் ஒரு முறையான ஆய்வை மேற்கொண்டு அவர்களின் நல்வாழ்க்கைக்கு போதுமான நிதி அளிக்குமாறு நான் அரசாங்கத்திற்கு ஆலோசனை கூற விரும்புகிறேன்.

அரசாங்கக் கட்சிகளின் மூலம் பணம் கொடுப்பதை நிறுத்துங்கள்.