அம்னோ இல்லை அதனால்தான் சரவாக்கில் நல்லிணக்கம் நிலவுகிறதாம்

masingசரவாக்கில்     நல்லிணக்கம்      நிலவுவது   ஏன்   என்று    விளக்கமளித்த   அம்மாநில     முதலமைச்சர்   ஜேம்ஸ்  மாசிங்,    மலாயாவில்   உள்ளது  போன்ற  நிலவரம்   சரவாக்கில்   இல்லை  என்பது    ஒரு   முக்கிய   காரணம்    என்றாராம். போர்னியோ  போஸ்ட்   நாளேடு   அவ்வாறு   கூறுகிறது.

இதுவும்,   மக்களிடையே   பெருமளவு    காணப்படும்   சகிப்புணர்வும்   மாநிலத்தின்    சிக்கலான   சமூக   அமைப்பு  சிதறிவிடாதபடி     கட்டிக்காக்கும்   மாநிலத்    தலைவர்களின்  திறமையான    ஆட்சிமுறையும்தான்   சரவாக்கை    மலேசியாவின்   முன்மாதிரி    மாநிலமாக    திகழச்   செய்கின்றன    என்றவர்   கூறினாராம்.

“சரவாக்கின்   சமூக   அமைப்பு    நாங்கள்    அமைதியாக    வாழ     வகை    செய்கிறது.  இதன்  பொருட்டு    நாங்கள்   மலாயாவின்    சமூக,    அரசியல்   கலாச்சாரங்கள்  சரவாக்கில்   நுழைய   அனுமதிக்க    மாட்டோம்.

“நாங்கள்    பல்லாண்டுகளாக     உழைத்து   உருவாக்கி  வைத்துள்ள   ஒரு   நிலை  இது.    இதை    மலாயாவிலிருந்து     ஒரு   அன்னிய    கலாச்சாரத்தைக்  கொண்டுவந்து     ஏன்   மாற்றிக்கொள்ள   வேண்டும்?   சரவாவுக்குள்    அம்னோ    நுழைவதற்கு   முடியாது    என்று   மாநிலத்    தலைவர்   அப்துல்   தயிப்  மஹ்மூட்  சொன்னது   மிகவும்   சரியானதே”,  என்று   மாசிங்    அந்நாளேட்டிடம்    தெரிவித்தார்.

27க்கு  மேற்பட்ட  இனப்  பிரிவினர்   அமைதியுடனும்     இணக்கத்துடனும்    வாழ்வது  எப்படி   என்பதை    அறிந்துகொள்ள   வேண்டுமா?  சரவாக்   வாருங்கள்   என்று      தீவகற்பத்தைச்   சேர்ந்த   சமூகவியலாளர்களை    அவர்   கேட்டுக்கொண்டார்.

“மற்றவர்கள்  எங்களைப்   பற்றித்   தெரிந்து  கொள்ள    விரும்பினால்  சரவாக்  வந்து      தெரிந்து    கொள்ளுங்கள்.  எப்படி   அமைதியாக    வாழ    வேண்டும்    எப்படி   மாநிலத்தை    ஆட்சி    செய்ய    வேண்டும்   என்பது   குறித்து    எங்களுக்குப்   போதனை    செய்யாதீர்”,  என்று   பிஆர்எஸ்   தலைவர்     கூறினார்.

முன்னாள்  சட்ட   அமைச்சர்   ஜைட்  இப்ராகிம்    “Madness in Malaysia”   என்ற   கட்டுரையில்   சரவாக்கில்   தமக்கேற்பட்ட   அற்புதமான   அனுபவங்களை   விவரித்திருப்பது    குறித்து   மாசிங்  கருத்துரைத்தார்.

சரவாக்  தலைவர்கள்     அம்மாநிலத்தை     மாநிலத்   தலைவர்களே   ஆட்சி      செய்ய   வேண்டும்   என்பதைத்    தொடர்ந்து   வலியுறுத்தி    வந்திருப்பதாகக்   குறிப்பிட்ட    மாசிங்,   சாபாவின்    ஆட்சியை   உள்ளூர்   கட்சிகளிடமிருந்து   அம்னோ   எடுத்துக்கொண்டது   ஒரு   பேரிடராக   அமைந்து   விட்டதாகவும்  வருணித்தார்.