இன்று 200க்கு மேற்பட்ட அம்னோ உறுப்பினர்கள் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து)வில் சேர உறுப்பினர் பாரங்களைச் சமர்ப்பித்தனர்.
அவர்களில் மிகப் பலர் ஸ்ரீமூடா அம்னோ கிளையைச் சேர்ந்தவர்கள். மொத்தம் 212 பாரங்கள் பெர்சத்துவிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
பாரங்களைப் பெற்றுகொண்ட பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர் அபு பக்கார் யாஹ்யா, அவர்கள் ஒரு மில்லியன் உறுப்பினர் சேர்க்கும் கட்சியின் நோக்கம் நிறைவேற ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“கட்சியில் பதவி கிடைக்கிறதோ இல்லையோ கட்சி அதன் நோக்கத்தை அடைய ஒன்றித்து உழைப்போம்”, என்றவர் தாமான் ஸ்ரீமூடாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இதனிடையே, முன்னாள் ஸ்ரீமூடா அம்னோ கிளை இளைஞர் பிரிவுத் துணைத் தலைவரான சுல் இஸ்கண்டர் ஜமாலுடின், அம்னோ உயர் தலைவர்களிடையே ஊழல் நிலவுவதாகவும் அதனால்தான் அம்னோவிலிருந்து வெளியேற முடிவு செய்ததாகவும் கூறினார்.
“அடிமட்ட உறுப்பினர்கள் அம்னோவின் உயர்வுக்காக பாடுபடுகிறோம். ஆனால், அம்னோ உயர் தலைவர்களிடையே ஊழல் நிரம்பியுள்ளது”, என்றாரவர்.