அன்வார்- ஆதரவு பதாதைகள் வைத்தவர்கள்மீது நிந்தனைக் சட்டம் பயன்படுத்தப்படுவதற்குக் கண்டனம்

bannerபினங்கு,  புக்கிட்  மெர்தாஜாமில்    ‘அன்வாரை  விடுவிப்பீர்’  பதாதைகளை   வைத்தவர்கள்மீது    1948ஆம்   ஆண்டு   தேச  நிந்தனைச்   சட்டத்தின்கீழ்   விசாரணை   மேற்கொள்ளப்படுவதை     கெராக்கான்  ஹாபுஸ்   அக்டா  ஹசுதான் (ஜிஎச்ஏஎச்)  கண்டித்துள்ளது.

விசாரணை    செய்யப்படும்  மூவரும்   வெள்ளிக்கிழமை    கைது   செய்யப்பட்டனர்.  அன்வார்  இப்ராகிமுக்கு     ஆதரவு     தெரிவிக்க  ஜனவரி   9-இல்   நடைபெறவுள்ள    பேரணியில்   கலந்து  கொள்வதை    ஊக்குவிக்கும்   பதாதைகளை   வைக்க   முயன்றபோது  அவர்கள்   கைதானார்கள்.

அவர்களின்   பதாதைகள்   நிந்தனைக்குரியவை    என்ற  அனுமானத்தின்பேரில்   செய்யப்பட்ட   புகார்களை அடிப்படையாக    வைத்து     போலீசார்  அவர்களைக்  கைது    செய்துள்ளனர்    என  ஜிஎச்ஏஎச்   ஒருங்கிணைப்பாளர்   அமிர்    அப்து   ஹாடி   கூறினார்.

“அதிகாரிகள்  அச்சட்டத்தை    அனுமானத்தின்    அடிப்படையில்    பயன்படுத்துவதை   முதலில்   நிறுத்த     வேண்டும்    என  ஜிஎச்ஏஎச்   வலியுறுக்கிறது.

“இக்காலத்துக்கு   ஒத்துவராத    இச்சட்டத்தை    எடுத்தெறிய   வேண்டும்.   குறை  சொல்பவர்களின்   வாயை    மூடவும்    அரசாங்கத்தின்    அதிகாரத்தை   நிலைபெறச்  செய்யவும்     இச்சட்டத்தைப்   பயன்படுத்திக்கொள்ளக்   கூடாது”,  என்றாரவர்.

“தேச    நிந்தனைச்     சட்டம்   தேசியப்   பாதுகாப்பு    என்ற  பெயரில்  மக்களின்  வாயைக்  கட்டுவதற்குத்    தொடர்ந்து   பயன்படுத்தப்பட்டு     வருகிறது”,  என   அமிர்   கூறினார்.