நான் இனவாதியா? நிரூபியுங்கள்- அம்னோவுக்கு கிட் சியாங் சவால்

kitடிஏபி   பெருந்   தலைவர்  லி   கிட்  சியாங்   அம்னோவுக்கும்   அதன்   கையாள்களுக்கும்   சவால்   விடுத்துள்ளார்.  கடந்த  51 ஆண்டுகளில்   தம்    எழுத்திலும்    பேச்சிலும்   “மலாய்க்காரர்களின்  எதிரி,   இஸ்லாத்துக்கு   எதிரி,  மலாய்   ஆட்சியாளர்களுக்கு    எதிரி”   என்பதற்கான   ஆதாரம்  எங்காவது    இருந்தால்   தேடிப்  பிடித்துக்   காட்டுங்கள்,  பார்க்கலாம்   என்பதுதான்  அவர்  விடுத்துள்ள    சவால்.

“கடந்த   அரை  நூறு   ஆண்டுகளில்   மலேசியாவில்     என்னளவுக்கு   வேறு    எந்த   அரசியல்   தலைவரும்   மலாய்-எதிரி,  இஸ்லாத்தின்   எதிரி,  மலாய்   ஆட்சியாளர்களின்   எதிரி    என்று   இழித்தும்   பழித்தும்   கூறப்பட்டிருக்க   மாட்டார்  என்றே   நினைக்கிறேன்”,  என்றாரவர்.

“என்   51  ஆண்டுக்கால   அரசியல்   வாழ்க்கையில்    ஒன்றுபட்ட,  ஜனநாயகத்தை   அடிப்படையாகக்  கொண்ட,  எல்லாவற்றையும்   விட  நீதியான   மலேசியா   அமைய   வேண்டும்   என்பதற்காக  கிட்டத்தட்ட   ஒவ்வொரு    நாளும்   எழுதியும்   பேசியும்   வந்திருக்கிறேன்.  எல்லாமே  பொது  ஆவணமாக  உள்ளது”,  என்று   லிம்  கூறினார்.

தம்    அரசியல்    வாழ்க்கையில்   இதுவரை   10 மில்லியன்  சொல்களை   எழுதியும்   பேசியுமிருக்கலாம்     என்று    மதிப்பிட்ட   லிம்,      அவற்றில்   எந்த   இடத்திலாவது     தாம்  “மலாய்-எதிரி,  இஸ்லாத்துக்கு   எதிரி,   மலாய்   அட்சியாளர்களின்   எதிரி”   என்பதற்கான   ஆதாரம்  இருப்பதாக   தம்மைக்   குறைகூறுவோரால்    காண்பிக்க  முடிந்திருக்கிறதா   என்று   வினவினார்.

அண்மையில்    சில   ஆண்டுகளாக  1969   மே  13  கலவரங்களைத்   தூண்டிவிட்டதாக   தம்மீது  ஒரு   குற்றச்சாட்டு  சுமத்தப்பட்டு    வருவதாகவும்   லிம்   கூறினார்.

2008-இல்  பொதுத்   தேர்தலில்   முன் எப்போதுமில்லாத  வகையில்   நிறைய   இடங்களை   வெற்றி    கொண்டதை    அடுத்துதான்   இப்படிப்பட்ட   குற்றச்சாட்டுகள்    அதிகமாகக்   கூறப்படுகின்றன.

துங்கு   அப்துல்   ரஹ்மான்,     அப்துல்    ரசாக்,     உசேன்  ஓன்,    டாக்டர்    மகாதிர்    காலத்தில்   அப்படிப்பட்ட   குற்றச்சாட்டுகள்   கூறப்பட்டதில்லை    என்று   லிம்   கூறினார்.