பள்ளி ஆண்டு தொடங்கி விட்டது ஆனால் சீனப்பள்ளிகளுக்கான நிதி இன்னும் கிடைக்கவில்லை

 

nofundyetசீனமொழி தொடக்கப்பள்ளிகளுக்கு 2016 ஆண்டுக்கு மத்திய அரசாங்கம் வழங்க உறுதியளித்திருந்த நிதி இருக்குமிடம் எங்கே என்று பினாங்கு முதல்வர் லிம் எங் குவாங் கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்போது புத்தாண்டின் மூன்றாவது நாளில் இருக்கிறோம், ஆனால் மத்திய அரசாங்கம் அந்நிதியை இன்னும் கொடுக்காமல் இருக்கிறது.

“அவர்கள் 2016 ஆம் ஆண்டுக்கான நிதியைக் கொடுக்கத் தவறிவிட்ட வேளையில், நாம் 2017 ஆண்டிற்கான நிதியைக் கொடுத்து விட்டோம்.

இதுதான் நமக்கும் அவர்களுக்கும் இடையிலான பெரும் வேறுபாடு. நாம் ஒரு திறமையுள்ள அரசு, ஆனால் அவர்கள் ஓர் இலஞ்ச ஊழல் நிருவாகம்”, என்று லிம் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“இது கடந்த ஆண்டைப் போன்றதுதான். ஜனவரி 3 இல் நாம் நமது நிதியை வழங்கினோம்.

“இதற்கு எதிர்மாறாக, பெடரல் அரசாங்கம் 2016 ஆம் ஆண்டிற்கான நிதியை இன்னும் கொடுக்கவில்லை” என்று ஐந்து சுயேட்சை சீனப்பள்ளிகளுக்கு 2017 ஆண்டுக்கான மாநிலத்தின் ரிம2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை இன்று அளித்த பின்னர் லிம் மேலும் கூறினார்.

“தயவு செய்து சொன்னதைச் செய்யுங்கள்”, என்றாரவர்.

“இது ஒரு தர்மசங்கடமான நிலை, ஏனென்றால் சீனப்பள்ளிகளுக்கான ரிம50 மில்லியன் பெடரல் அரசாங்கத்தின் ரிம270 பில்லியன் பட்ஜெட்டில் வெறும் 0.018 விழுக்காடுதான்.

“ஜோ லோவுக்கு 1எம்டிபி வழியாக கிடைத்த பணத்துடன் ஒப்பிடும்போது இது மிகச் சிறியதே”, என்று லிம் கூறிக்கொண்டார்.

பினாங்கு மாநில அரசு ரிம50 மில்லியனை கடனாக மத்திய அரசுக்கு கொடுக்க முன்வந்ததை அவர் மீண்டும் நினைவுறுத்தினார்.

ஆனால், அக்கடனை திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்று லிம் கூறினார்.

இந்த விவகாரத்தில் மசீச தூங்கிக் கொண்டிருப்பதாக கூறிய குவான் எங், அவர்கள் பதவி துறப்பது மேன்மையானதாகும் என்றாரவர்.