அமனா கட்சியுடன் ஒத்துழைப்பதற்கு எதிராக பிகேஆரையும் பெர்சத்துவையும் பாஸ் கட்சி மிரட்டி வருவதன் மூலம் அடுத்தப் பொதுத் தேர்தலில் முக்கோண போட்டியைத் திணிக்க அக்கட்சி முயல்கிறது.
இருக்கை ஒதுக்கீடு குறித்து பாஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வராமல் இருப்பதால் அடுத்தப் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று நேற்று பாஸ் கட்சியின் உதவித் தலைவர் இஸ்கந்தர் சாமாட் கூறியிருந்ததற்கு எதிர்வினையாற்றிய அமனாவின் தகவல் பிரிவுத் தலைவர் காலிட் சாமாட் இவ்வாறு கூறினார்.
“பாஸ் கட்சியின் இடத்தை அமனா பிடிக்க வேண்டுமென்றால் அக்கட்சி பாஸுடன் நேரடியாகப் போட்டியிட வேண்டும்; அதன் பங்காளிகளான பிகேஆர் மற்றும் பெர்சத்து வேட்பாளர்களை நிறுத்தக்கூடாது என்ற இஸ்கந்தரின் கருத்தை அமனா கவனத்தில் எடுத்துக்கொள்ளும்.
“பாஸ் கட்சிக்கும் அமனாவுக்கும் இடையிலான போட்டியில் பிகேஆரும் பெர்சத்துவும் இழுக்கப்படக்கூடது என்பதை அமனா ஒப்புக்கொள்கிறது.
“இதன் அடிப்படையில், அமனாவுடன் ஒத்துழைத்தால் பிகேஆருக்கும் பெர்சத்துவுக்கும் எதிராக பாஸ் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சிகளை பாஸ் மிரட்டுவதை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் ஆலோசனை கூறுகிறோம்”, என்று காலிட் சாமாட் விடுத்துள்ள ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
ஆனால், பாஸ் தொடர்ந்து ஹரப்பான் மற்றும் அதன் ஆதரவுக் கட்சிகளுக்கு எதிராகப் பிளவை ஏற்படுத்தினால், பாஸ் மற்றும் பின் ஆகியவற்றுடனான முக்கோண போட்டியைச் சந்திக்க அமனா தயாராக இருப்பதாக காலிட் மேலும் கூறினார்.
மும்முனை என்ன எத்துனை பேர் போட்டியிட்டாலும் தகுதியுள்ளவர் வெற்றிப் பெற்றால் மக்களுக்கு நல்லது.