செவ்வாய்க்கிழமை மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) சிறப்பு நடவடிக்கை பிரிவு இயக்குனர் பாஹ்ரி முகம்மட் சின், அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை வெளியிட்டார்.
2919-இல் பணி ஓய்வு பெற வேண்டிய அவர் முன்கூட்டியே ஓய்வு பெற முடிவு செய்ததாகக் கூறினார். அதற்கு அவர் தெரிவித்த காரணம்தான் அதிர்ச்சி அளித்தது. எஸ்ஆர்சி இண்டர்நேசனல் நிறுவனம் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் விசாரணை முடிவில் அதன்மீது வழக்கு தொடுக்க முடியாமல் போன ஏமாற்றத்தால்தான் முன்கூட்டியே பணி ஓய்வு பெறும் முடிவுக்கு வந்ததாகவும் அவர் கூறினார்.
அவர் அவ்வாறு தெரிவித்த சில மணி நேரங்களில் எம்ஏசிசி ஓர் அறிக்கையில், பாஹ்ரியைத் தொடர்புகொண்டு பேசியதாகவும் அவர் எஸ்ஆர்சி விவகாரத்தில் ஏமாந்துபோனதாகக் கூறியதை மறுக்கிறார் என்றும் கூறிற்று.
அதேபோன்று எம்ஏசிசி நடவடிக்கை பிரிவு துணைத் தலைவர் அஸாம் பாகியும், பாஹ்ரி “30மில்லியன் மலேசியர்களுக்குப் பாவம் செய்து விட்டதன் காரணமாக” அம்முடிவுக்கு வந்ததாகக் கூறும் ஊடகச் செய்திகளைப் புறந்தள்ளினார்.
“நாங்கள் அவரைத் தொடர்பு கொண்டோம். அவர் இணைய செய்தித்தளத்திடம் அப்படிக் கூறியதாக சொல்லப்படுவதை மறுக்கிறார்”, என்றவர் கூறினார்.
அந்த வகையில் எம்ஏசிசி- இன் அறிக்கையும் அஸாமின் அறிவிப்பும் ஊடகச் செய்திகள் இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறுவதாகத் தெரிகிறது.
அவ்விவகாரத்தை முதலில் போட்டுடைத்தது மலேசியாகினி. ஒரு வட்டாரத்தை மேற்கோள்காட்டி அச்செய்தியை வெளியிட்ட மலேசியாகினி பின்னர் பாஹ்ரினிடம் அதை உறுதிப்படுத்திக் கொண்டது. வேறு பல ஊடகங்களும் அவ்விவகாரம் தொடர்பில் செய்தி வெளியிட்டிருந்தன.
ஃப்ரி மலேசியா டூடே, மலாய்மொழி நாளேடான சினார் ஹரியான், சின் சியு டெய்லி ஆகியவை அவற்றுள் அடங்கும். அவற்றின் செய்தியாளர்கள் முன்னாள் எம்ஏசிசி இயக்குனரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.
அப்படி இருக்க, அதை ஒரு பொய்யான செய்தி என்று எம்ஏசிசி கூறுவதைப் பார்த்தால், ஒரு பொய்யான செய்தியை வெளியிடுவதில் அத்தனை ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டிருப்பதாக அது கூற வருகிறதா?
நேற்றிரவு, மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம்(எம்சிஎம்சி) மலேசியாகினியைத் தொடர்புகொண்டு எம்ஏசிசி-இன் அறிக்கை அதை ஒரு பொய்யான செய்தி என்பதால் அச்செய்தியைச் செய்தித்தளத்திலிருந்து நீக்கி விடுமாறு கூறும் உத்தரவை ஒரு மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருந்தது.
ஆனால்,, மறுநாள் காலையே அந்த உத்தரவை மீட்டுக்கொண்டது.
எம்ஏசிசி அறிக்கை குறித்து பாஹ்ரியின் கருத்தை அறிய மலேசியாகினி அவரைத் தொடர்பு கொண்டபோது அந்த முன்னாள் இயக்குனர் தம் சார்பில் மற்றவர்கள் பேசி மக்களைக் குழப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
விரைவில் ஓர் அறிக்கை வெளியிடப்போவதாகவும் அவர் உறுதி கூறினார். அத்துடன், எஸ்ஆர்சி விவகாரத்தை நீதிமன்றம் கொண்டு செல்ல போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால் அது கொண்டு செல்லப்படவில்லை என்று கூறியுள்ள பிரதமர்துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லானுக்குத் தக்க எதிர்வினை விடுக்கப்போவதாகவும் பாஹ்ரி கூறினார்.
முரண்பாடுகளின் உச்சம்! இதற்கு அப்புறமும் அரசாங்க அமுலாக்கத் துறையின் தரம் என்ன என்பதை தரணி முழுவதும் படம் போட்டுக் காட்ட வேண்டுமா? தரம் கெட்ட அரசாங்கத்தால் நாம் ஆளப்படுகிறோமா?