தாம் பினாங்கு முதலமைச்சர் லிம் குவாங் எங்கின் வியூக ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பதை ஹராகா டெய்லி ஒரு பிரச்னையாக்குவதை பிகேஆரின் சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் விரும்பவில்லை.
பாஸ் கட்சிச் செய்தித்தாளான ஹராகா டெய்லி சைபுடினுக்கு அப்பதவி வழங்கப்பட்டதை ஒரு வகை ‘கையூட்டு’ என்று வருணித்திருந்தது.
அது குறித்து கருத்துரைத்த சைபுடின், முன்பு பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அசிஸ் நிக் மாட் தம்மை கிளந்தானில் மாநில அரசு- தொடர்புள்ள ஒரு நிறுவனத்துக்குத் (Tabung Amanah Tok Kenali) தலைவராக நியமித்ததைச் சுட்டிக்காட்டியதாக சினார் ஹரியான் நாளேடு கூறியது. 2004-இலிருந்து 2007வரை அவர் அந்த ஜிஎல்சிக்குத் தலைவராக இருந்தார்.
பாஸ் கட்சியின் உறுப்பினன் அல்ல என்ற போதிலும் நிக் அசிஸ் தம்மை அப்பதவிக்கு நியமித்தார் என்றாரவர்.
“முன்பு பாஸ் செய்ததைத்தான் இப்போது லிம் செய்திருக்கிறார்.
“லிம் எனக்கு அப்பதவி வழங்கியதை ஒரு ‘கையூட்டு’ என்றால் பாஸின் செய்கையும் கையூட்டுத்தானே? அதுவும் சரியல்லவே”, என்று சைபுடின் கூறியதாக அந்நாளேடு அறிவித்துள்ளது.