“யுஇசிக்கு அங்கீகாரம் இல்லை” என்ற எச்சரிக்கை விடவில்லை என்கிறார் முகைதின் யாசின்

 

UECMuபக்கத்தான் ஹரப்பான் தலைமையிலான அரசாங்கம் யுஇசி (Unified Examination Certicate) சான்றிதழை அங்கீகரிக்காது என்ற எந்த எச்சரிக்கையையும் தாம் விடுக்கவில்லை என்று பார்டி பிரிபூமி பெர்சத்துவின் தலைவர் முகைதின் யாசின் கூறினார்.

யுஇசிக்கு அங்கீகாரம் அளிப்பது மலேசியாவின் கல்விக் கொள்கையைப் பொறுத்திருக்கிறது என்று மட்டுமே முகைதின் யாசின் கூறியதாக அவரது அலுவலகம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறது.

யுஇசிக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு தற்போதைய மற்றும் எதிர்காலக் கல்விக் கொள்கைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுவதன் நோக்கம் தேசியக் குறிக்கோளுக்கு எதிரான மற்றும் எதிராக எதையும் நாம் செய்ய முடியாது என்று முகைதின் மேலும் கூறினார்.

பொதுவாக, யுஇசியை எவ்வாறு அன்கீகரிக்கலாம் என்ற விபரத்தைத்தான் முகைதின் தெரிவித்தார்.

த ஸ்டாரின் “பக்கத்தான் யுஇசியை அங்கீகரிக்காது” மற்றும் த மலே மெயிலின் “பக்கத்தான் யுஇசியை அங்கீகரிக்காமல் போகலாம்” என்ற தலைப்புச் செய்திகள் மொத்தத்தில் தவறான எண்ணத்தை தோற்றுவிக்கிறது, தீங்கான விளைவுகளை ஏற்படுத்தகூடியது மற்றும் ஆதாரமற்றது என்று முகைதின் அறிக்கை கூறுகிறது.

சின் சியு ஜிட் போவுடனான நேர்காணலில் முகைதின் அப்படி எந்த ஓர் எச்சரிக்கையையும் விடுக்கவில்லை என்று அவரது அலுவலகம் தெரிவித்தது.

இது போன்ற தவறான அறிக்கை தேசிய ஒற்றுமைக்கும் உறுதிப்பாட்டுக்கும் நற்குறியாக அமையாது என்று முகைதின் அலுவலகம் கூறிற்று.

சின் சியு டெய்லி மேற்கொண்ட நேர்கணலின் அடிப்படையில் த ஸ்டார் மற்றும் த மலே மெயில் ஆகிய இரண்டும் இன்று முன்னேரத்தில் மேற்குறிப்பிட்ட தலைப்புகளில் செய்தியை வெளியிட்டன.

இந்த நேர்காணலின் போது சைனா பிரஸ் மற்றும் நான்யாங் சியாங் பாவ் ஆகிய நாளிதழிகளும் இருந்தன என்று முகைதின் யாசின் அலுவலகம் கூறுகிறது.

யுஇசி தேர்வு மலேசிய சீன சுயேட்சை உயர்நிலைப்பள்ளிகளுக்கு டோங் ஸோங் என்ற அமைப்பால் நடத்தப்படுகிறது. (இத்தேர்வின் சான்றிதழ் உலகின் மிகப் புகழ் பெற்ற 800 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழங்களாலும், கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட், சிங்கப்பூர் ஆகிய பல்கலைக்கழகங்கள் உட்பட, கல்வி நிலையங்களாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.)

யுஇசிக்கு அங்கீகாரம் அளிப்பது தேசிய கல்விக் கொள்கை சம்பந்தப்பட்ட விவகாரமாகும். இக்கொள்கை ஒரே பாடத்திட்டத்தையும் ஒரே தேர்வு முறையையும் கொண்டிருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. இதில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ரசாக் அறிக்கை காலத்திலிருந்து இருந்து வருகிறது என்று முகையின் வலியுறுத்தியதாக சின் சியு டெய்லி செய்தி கூறுகிறது.

“கல்வி மக்களை ஒன்றுபடுத்த முடியும். (நாம் இன்னும் யுஇசியை அங்கீகரிக்கவில்லை என்றாலும்) நாம் இதில் இரக்கம் காட்டி வந்திருக்கிறோம்” என்று கூறிய முகைதின் யாசின், தாம் கல்வி அமைச்சராக இருந்த போது சுயேட்சை உயர்நிலைப்பள்ளியில் தேர்வு பெற்றவர்களை உள்ளூர் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி கழகங்களில் சேருவதற்கு அனுமதித்தோம். ஆனால் அவர்கள் எஸ்பிஎம் தேர்வு பெற்றிருக்க வேண்டும் என்றார் என்று சின் சியு செய்தி மேலும் கூறுகிறது.